கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2024 மாகாண இலக்கிய விழாவில் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் றாஷிக் நபாயிஸ் ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதை பெற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யூ.ஜி. திசாநாயக்க தலைமையில் (11) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற விழாவின்போதே அவர் கெளரவிக்கப்பட்டார்.
இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க சிறப்பு அதிதியாகவும், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2007 ஆம் ஆண்டிலிருந்து ஊடகப்பணி மற்றும் சமூகப்பணியில் தன்னை அடையாளப்படுத்தி செயற்பட்டு வருகின்ற இவர், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிராந்திய செய்தியாளராக செயற்பட்டு, அதிக சமூகம்சார் கட்டுரைகள் பொது விடயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆக்கங்களை எழுதி பொதுமக்களுக்கு பல விழிப்புணர்வுகளை வழங்கிவருகின்ற ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.
பொது அறிவு அறிமுகத் தொகுப்பு, யூரோ நாணய அறிமுகத் தொகுப்பு, ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி, மருதமுனை சமாதான நீதிபதிகள், அனர்த்தங்களும் நாமும் மற்றும் அழைப்போம் பயன்பெறுவோம் எனும் ஆறு நூல்களை எழுதி மக்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இவரின் சமூகம் சார் செயற்பாடுகளை கெளரவிக்கும் நோக்கில் கடந்த (11) ஆம் திகதி கிழக்கு மாகாண
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விருது வழங்கள் விழாவின்போது சிறந்த
ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர்
மாகாண விருது”
சான்றிதழ் மற்றும் காசோலை
போன்றன வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.