அரச கலாபூசணம் விருது

மூதூர் ஈச்சிலம்பற்றினைப் பிறப்பிடமாகவும்,மல்லிகைத்தீவினை வாழ்விடமாகவும் கொண்டவரே நாடறிந்த கவிஞர் திரு.ப.மதிபாலசிங்கம் அவர்கள்.

இவர் 1989 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் பல்துறைசார்ந்து எழுதிகொண்டிருக்கின்ற ஓயாத மனிதர்.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய வரலாற்றைக் கூறும் பத்துப் பாடல்கள் அடங்கிய “வெருகலம்பதி வேலவன் கீதங்கள்” எனும் இறுவட்டை வெளியிட்ட பெருமைக்குரியவர்.சக்தி பண்பலையில் நிலாச்சோறு நிகழ்ச்சியில் இன்றுவரை தமது படைப்புகளை அரங்கேற்றி வருவதோடு,கனடா தமிழாழிக் காட்சியில் ஈழத்துக் கவிக்களம் நிகழ்ச்சியில் கவிஞர்,கருத்தாளர்,நடுவர் போன்ற பணிகளிலும் பங்காற்றி வருகின்றார்.இலங்கை வானொலியில் பல இலக்கியம்,பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்குகொண்டவராவார்.இவர் எழுதிய பல மெல்லிசைப்பாடல்கள் இன்றும் வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றமை பெருமைக்குரியதாகும்.இவை மட்டுமல்லாது முகநூல் குழுமங்களில் நடைபெறும் கவிதைப் போட்டிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி வருபவர்.இரண்டு கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரச துறையில் ஆசிரியராக,அதிபராக,கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி வகித்துள்ளார்.தற்போது சேவையில் ஓய்வு பெற்றுள்ள போதும் இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றமை பாராட்டுதற்குரியதாகும்.ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் முப்பத்து நான்கு வருடங்கள் ஆற்றிய கல்விப்பணி ஊடாக சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும்.

இவரது இலக்கியத்துறையைக் கௌரவிக்கும் .முகமாக கடந்த 12.12.2024 ஆம் திகதி புத்த சாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நடைபெற்ற 39ஆவது கலாபூசண விருது வழங்கும் விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.