அபயத்தினால் பெரியபுல்லுமலை மக்களுக்கு இலவச மூக்குகண்ணாடி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியபுல்லுமலை கிராம மக்களுக்கு அபயம் அமைப்பினால் இலவச மூக்குக்கண்ணாடி ஞாயிற்றுக்கிழமை(15) வழங்கி வைக்கப்பட்டது.

அபயம் அமைப்பினர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், செங்கலடி வைத்தியசாலை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றோடு இணைந்து இலவச மருத்துவப்பரிசோதனையை பெரியபுல்லுமலை கிராமத்தில் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

இதன்போது 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவப்பரிசோதனையில் ஈடுபட்டு அதற்கான மருந்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர். மேலும் பார்வைக்குறைபாடுள்ள 100பேர் இப்பரிசோதனையின் போது இனங்காணப்பட்டிருந்தனர். அவ்வாறு இனங்காணப்பட்ட 100பேருக்கும் இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் இதன்போது வைத்தியப்பரிசோதனையை மேற்கொண்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள் எனப்பலரும் மருத்துவஉதவியைப் பெற்றுக்கொண்டர்.

குறித்த பகுதியில் உள்ள மக்கள் மருத்துவசேவையை பெற்றுக்கொள்ள நீண்டதூரம் பயணித்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு மாதாந்தோறும் அபயம் அமைப்பின் உதவியுடன் இப்பகுதியில் மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

மருத்துவ உதவியினைப்பெற்றுக்கொண்ட மக்கள் உரிய அமைப்பினருக்கும், அரச சுகாதாரசேவையினருக்கும் நன்றியினையும் இதன்போது தெரிவித்துக்கொண்டனர்.
இதன்போது அபயம் அமைப்பின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.