*கிண்ணியா தமிழ் மொழிப் பாட ஆசிரியரும் *ஊடகவியலாளர்மான எச் எம் ஹலால்தீனுக்கு “கிழக்கு மாகாண இலக்கிய வித்தகர் விருது” – 2024*

கிண்ணியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான, எச் எம். ஹலால்தீன் 2024 ஆம் ஆண்டுக்கான ” கிழக்கு மாகாண *இலக்கிய வித்தகர் விருது ” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே இவர் கௌரவிக்கப் பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலக அமைச்சின் ஏற்பாட்டிற்கு நடந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கிய வித்தகர் விருது பெற்றவர் இவர் ஒருவர் மாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவின் முதல் தமிழ் விசேடதுறை பட்டதாரி ஆசிரியரான இவர், உலா வரும் கலா, இளைய அண்ணன், ஜெசிகலா, கடற்கரை கவிராயர் முதலான புனை பெயர்களில் எழுதி வருகின்றார்.

பெரிய கிண்ணியா 6ஆம் டிவிஷனைச் ஹயாத்து முகமது ரோஜா நோனா தம்பதிகளின் நான்காவது புதல்வருமான இவர் ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணிய ஆண்கள் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை கிண்ணிய மத்திய கல்லூரியிலும் கற்றுக்கொண்டார்.

1989 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் சித்தியடைந்து திருகோணமலை மாவட்டத்தில் நான்காம் ரேங்கினை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் 1991 ஆம் ஆண்டு நுழைந்தார்.

இவர் தமிழ் மொழியை விசேட மொழியாக (BA Hons Tamil)கற்றுக் கொண்டதோடு அதே பல்கலைக்கழகத்தில்(MA Tamil) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் 2004 ஆம் ஆண்டு காலங்களில் காலி ருஹுனு கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமை ஆற்றினார்.

தேசிய கல்வி நிறுவனம் (NIE) திருகோணமலை வளாகத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சிறுவயதில் முதல் சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் கவிதை கட்டுரை சிறுகதை நாடகம் விமர்சனம் நாட்டார் கலைகட்டல்,சிறுவர் இலக்கிய படைப்பு,பாடல் ஆக்கம் முதலானவற்றில் ஆர்வம் காட்டியதோடு எழுதியும் பாடியும் வருகின்றார்.

தனது 19-வது வயதில் முதன் முதலாக இவருடைய “தேவி தந்த ரோஜா” என்ற சிறுகதை 1987 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இதனை அடுத்து அதே ஆண்டில் 1987 ஆம் ஆண்டு சூடாமணி என்ற பத்திரிகையில் “நடைகள்” என்ற தலைப்பில் முதல் முதலாக கவிதை வெளிவந்ததுள்ளது.

1987ஆம் ஆண்டுகளில் பத்திரிகைகளில் வெளி வருவதற்கு முன்னர் பாடசாலைக் காலங்களில் படிக்கும் போது சஞ்சிகைகளிலும்,போட்டி நிகழ்வுகளிலும், மேடைகளிலும் இவரது ஆளுமைகள் வெளிக்காட்டப்பட்டிருகின்றன.

பல பத்திரிகலையும், சஞ்சிகைகளிலும்,வானொலி தொலைக்காட்சிகளிலும் இலக்கியங்களைப் படைத்து வரும் இவர் வீரகேசரி, விடிவெள்ளி, சக்தி டிவி சக்தி எஃப் எம் நிருபராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சமூகத்தில் பல பிரச்சினைகளை இனம் கண்டு எழுதுவதுடன் அதற்கான பரிகார தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். நிருபராக மட்டும் செயற்படாது சிறந்த தமிழ் மொழிப்பாட ஆசானாகவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிகாட்டியாகும் செயற்பட்டு வருகின்றார். இவரது ஊடகத் திறமைக்காகவும், சமூகப் பணியாற்றியதற்காகவும் மகாராஜா கூட்டு நிறுவனம் பாராட்டி இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது. திருகோணமலை மாவட்டத்தில் ஊடகத்துறைக்கு பங்காற்றியதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதலாவது செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் போட்டி பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று தமிழ் பாட ஆசிரியராக நியமத்தைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழ் மொழி பாடத்திற்கான ஆசிரியர் ஆலோசகர் போட்டி பரீட்சையில் அதிக கூடுதலான புள்ளிகளை பெற்று கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஆசிரியர் ஆலோசகராகக் கடமை ஆற்றி கொண்டிருக்கும் காலப்பகுதியில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பின்னர் மீண்டும் ஆசிரியராக கிண்ணியா அல் மினா மஹா வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார்.

2013 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கிய படைப்புக்காக தேசிய விருதை பெற்றுக் கொண்டதோடு இதுவரைக்கும் 12 க்கு மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

1905 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான ” இளங்கதிர்” இதழின் இதழ் ஆசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.

சீனா இலங்கை நட்புறவுச் சங்கம்,ஜப்பான் இலங்கை மேம்பாட்டுச் சங்கம்,அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரை போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களையும், வெற்றிக் கேடயங்களையும் சுவிகரித்துள்ளார் .

அகில இலங்கை சமாதான நீதிவானாகிய இவர் “தேச கீர்த்தி, கலைதாரகை, கவி தாரகை, அரங்கொளி, முதலான பட்டங்களையும் 2024 ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய வித்தகர் விருதையும் பெற்றுக்கொண்டார்.

சுமார் 37 வருட கால இலக்கிய பயணங்களின் மூலமாக பெற்றுக்கொண்ட உழைப்பின் அடையாளமாகவே கிழக்கு மாகாண “இலக்கிய வித்தகர் விருது” 2024.12.11ஆம் திகதி திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும், திருகோணமலை மீடியா போரத்தின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.