பொதுப்பணிக்காக என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று, இலங்கை இராணுவத்தின் 24ஆம் படைப்பிரிவின் 16வது கட்டளை தளபதியாக நியமனம் பெற்றுள்ள மேஜர் ஜெனரல் எச்.சீ.எல்.களப்பத்தி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சினேகபூர்வ சந்திப்பின்போதே கட்டளைத்தளபதி இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பு (05) அம்பாறை – மல்வத்தையில் அமைந்துள்ள படைத் தலைமையக்கத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த அவர்:
அம்பாறை மாவட்டம் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் மாவட்டமாகும். இங்கு வாழும் மக்களின் சகல பிரச்சினைகளிலும் பொறுப்பு வாய்ந்த முறையில் நானும் பங்கெடுக்க தயாராக இருப்பதாகவும், பொதுப்பிரச்சினைகளின் போது பொதுமக்கள் தன்னை தொந்தரவு செய்ய வேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
24 மணிநேரமும் மக்கள் பணி செய்ய தான் பணிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக விஷேட அனர்த்தங்கள் இடம்பெறும்போது தானும், தனது படைவீரர்களும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், தான் கடமை ஏற்ற முதல் தினமான (04) ஆம் திகதியே அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களிற்கு நேரடி கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதாகவும், அது தொடர்பான எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் தன்னார்வ அணியின் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம். நாஸிரூன், மௌலவி ஏ.பி.எம். ஷிம்லி மற்றும் வஸீம் சஜ்ஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.