வடகிழக்கு மாகாணங்களில் இரு தடவைகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகளும், ஆயிரக்கணக்கான மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விஷேட நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 161,916 பேரும், 85000 ஹெக்டயர் விவசாயக் காணிகளும், 605 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை நிந்தவூர், காரைதீவு, கல்முனை பிரதேசங்களைச் சேர்ந்த 66,000 இற்கு மேற்பட்ட மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொத்துவில், திருக்கோவில் பிரதேச மீனவர்களின் இயந்திர வள்ளங்களும் வெள்ளத்தினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மீனவர் சமூகத்திற்கு இதுவரை எவ்விதமான நிவாரணங்களும் வழங்கப்படாத நிலைமையே காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலேயே இந்நிலைமை காணப்படுகின்றது. இதனை மீன்பிடி அமைச்சர் கவனத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவை மாத்திரமல்ல, இம்முறை ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்
அம்பாறை மாவட்டத்தில் 11 பேர் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவத்தினால் எமது மாவட்ட மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, இந்த விடயங்களை விடயங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரித்து வழங்குவதுடன், மீனவர்களுக்கான அவசர உதவிகளையும் வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக்கொண்டுள்ளார்.