பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க திருகோணமலையில் 16நாள் செயற்பாடு எனும் வீதி ஊர்வலம் ஒன்று இன்று (06) இடம் பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை துறை முக பொலிஸ் முன்றலில் இருந்து உட்துறை முக வீதியில் உள்ள இந்து கலாச்சார மண்டபத்தை சென்றடையும் வகையில் 1000 பெண்கள் அடங்கிய வகையில் ஊர்வலமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திதவாறு சென்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் பல விழிப்புணர்வூட்டல்களை இதன் போது முன்னெடுத்திருந்தனர்.ஆண் பெண் என்ற ரீதியில் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்ற கொள்கை ஊடாக இதனை முன்னெடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு நடைபவணியின் பின்னர் இந்து கலாசார மண்டபத்தில் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது .இதில் பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் ஒழிப்பது தொடர்பான பல கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது .இதன் போது உரையாற்றிய சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் 16நாள் செயற் திட்டத்தில் ஒன்றாக இணைந்து ஆண், பெண் வேறுபாடின்றி வன்முறைகளை ஒழிக்க முன்வர வேண்டும் .இதனை முன்னிருத்தி திருகோணமலையில் இத் திட்டத்தை முன்னெடுக்கிறோம் .1000 பெண்கள் ஒன்றினைந்து ஊர்வலமாக இதனை முன்னெடுத்துள்ளோம். பெண்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் இதற்காக அரசும் முன் வந்து பெண் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான முன்னுரிமைகளை வழங்க வேண்டும் என்றார்.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.