மேர்வின் பாதையில் செல்கிறாரா டில்வின் ?

அண்மையில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் செயலாளரான டில்வின் சில்வா அவர்கள், மாகாண சபை முறையை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கீழ் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின சில்வா அவர்களின் அடிப்படைவாதக் கருத்துக்கு ஒப்பானதாக அமைந்துள்ளது.

மேலும் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில,சரத் வீரசேகர போன்ற அடிப்படைவாதிகளின் கருத்துகளும் இப்பாணியில்தான் அமைந்துள்ளன.

இடது சாரிக்கொள்கையின் அடிபடையில், இயங்குவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தியினரின் செயலாளர் அவர்கள் பாரம்பரிய பேரின அடிப்படைவாதத்தில் இருந்து விடுபடவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

மாகாணசபை முறையினைப் பலப்படுத்த உள்ளதாகத் தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தியினர், தேர்தலின் பின்னர் தடம் மாறிப் பயணிக்கவுள்ளார்களா? என்ற சந்தேகத்தை டில்வின் சில்வா அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.

புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது கூட்டாட்சி அடிப்படையில் அமைய வேணடும் என்று எமது தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அப்படியிருக்க குறைந்தளவான அதிகாரப்பகிர்வையுடைய மாகரண சபை முறையையே நீக்க வேண்டும் என்று டில்லின் சில்வா கூறுவது தமிழர்களின் அறவழி; ஆயுதவழி சார்ந்த உரிமைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சுமார் 60 ஆயிரம் போராளிகள் மற்றும் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர் இழப்பினை மதிக்காத அடிப்படைவாதக்கருத்தாகவே டில்லினின் கருத்தை தமிழர்கள்களும் தமிழ்த் தேசிய வாகிகளும் கருதுகின்றனர்.

அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் இனவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.அதேவேளை டில்வின் சில்வா அவர்கள் இனவாதத்தைக் கை விடாமல் உள்ளார். அப்படியென்றால் தேசிய மக்கள் சக்தியின் இடதுசாரிப் பாசறைக்குள், இன்னும் இனவாதிகள் உள்ளதை இது காட்டுகின்றது.

இப்படியானவர்கள் தேசிய மக்கள் சக்திக்குள் இருப்பது என்பது தேசிய மக்கள் சக்தியை இனவாத அமைப்பாகவே காட்ட வழிவகுக்கின்றது. இந்தப்போக்கு நீடித்தால் பச்சை,நீலக் கட்சி போன்றே சிவப்புக் கட்சியையும் தமிழர்கள் எடை போட்டு விடுவார்கள்.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசானது தேசிய இனப்பிரச்சினைய நியாயமான முறையில் கூட்டாட்சி முறை மூலமாதத் தீர்க்க முன்வர வேண்டும். அதன் மூலமாகத் தமிழர்களின் மனங்களை வெற்றி கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி, பொதுஜனப் பெரமுன கட்சிகளுக்குப் படுதோல்வி ஏற்பட்டிருப்பதை தேசியமக்கள் சக்தியினர் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த கால அரசியல் சரித்திரத்தைக் கற்காத எந்தக் கட்சியும் நாட்டில் தரித்திரத்தையே சரித்திரமாக்கி விட்டுள்ளன என்பதை சரித்திரம் கூறுகின்றது. இந்த தரித்திரத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி கடக்க வேண்டும். அதற்கான முதல் வேலை இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வேயாகும்.