சல்வீனியா தாவரம் சூழுந்து பாதிக்கப்பட்டு முற்றாக கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்கான நஷ்ட ஈட்டினை அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும்

வெள்ள அனர்த்தத்தினால் சல்வீனியா தாவரம் சூழுந்து பாதிக்கப்பட்டு முற்றாக கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்கான நஷ்ட ஈட்டினை அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் என அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டு கண்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தில்லையாற்றைச் சூழ்ந்திருக்கும் பனங்காட்டு கண்டம் மாத்திரமன்றி நாவற்காடு. புட்டம்பை அம்மாள்வெளி உள்ளிட்;ட பல கண்டங்கள் சல்வீனியா தாவரம் சூழ்ந்தமை மற்றும் தில்லையாற்று அணையில் ஏற்பட்ட முறிவுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பனங்காட்டு கண்டத்தில் 60 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக கைவிடப்பட்டுள்ளதுடன் 72 ஏக்கர் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இது தவிர பல கண்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
அத்தோடு ஆற்றை அன்மித்த பகுதிகளில் முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை திருத்துவதற்கான நடவடிக்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
வங்கியில் கடன்களை பெற்றும் நகைகளை ஈடுவைத்தும் பெறப்பட்ட பணத்தில் இருந்து விவசாய செய்கையினை மேற்கொண்ட ஏழை விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த போகத்தில் கூட இதன் தாக்கம் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினர்.
ஆகவே அரசாங்கமும் விவசாய அமைச்சரும்; விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீண்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.