அம்பாறையில் நீர்க் குழாய் கொண்டு செல்லும் பாதையில் திருத்த வேலை!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் இருக்கும் நயினாகாடு வடசேரி எனும் இடத்திற்கு உரிய புதிய குழாய்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்வதற்கான பாதை தற்போது செப்பனிடப்பட்டுவருகிறது.

இப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னரே புதிய குழாய்கள் பொருத்தும் திருத்த வேலைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
அதனால் இப்போதைக்கு காரைதீவுக்கான நிரந்தரமான குடிநீர் விநியோகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த (29) வெள்ளிக்கிழமை
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி , இயக்கமும் பராமரிப்பும் பிரிவிற்கான பொறியியலாளர் பாக்கியராஜா மயூரதன் மற்றும்
காரைதீவு பிரதேச காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் சிரமத்திற்கு மத்தியில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர்.

திருத்த வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையிட்டு அவர்கள் ஆராய்ந்தபோதிலும்
திருத்த வேலைக்கான உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான வாகனப் பாதை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டநிலையில் இருந்தது. அதனால் உடனடியாக திருத்த வேலைகள் இடம்பெறவில்லை.

தற்போது இரவு பகலாக அப்பாதைசெப்பனிடப்பட்டுவருகிறது.

பெரும்பாலும் நாளை (02 ) திங்கட்கிழமை பாதை திருத்த வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னரே குழாய் பொருத்தும் திருத்த பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.