கல்முனை மாநகர சபையில் அனர்த்த மீளாய்வுக் கூட்டம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் பேரிடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட அனர்த்த கட்டுப்பாடு மற்றும் மீட்பு மீளாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டம் புதன்கிழமை (27) இரவு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பேரில் அவரது பங்கேற்புடன் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை உப பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரி. அதிசயராஜா, கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம். ஜௌபர், பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம். றபீக் உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகம் என்பவற்றை உள்ளடக்கியதாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் இப்பிரதேசங்களில் முன்னெடுக்கபட்டு வருகின்ற அனர்த்த கட்டுப்பாடு மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியிருக்கின்ற மக்களின் தேவைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

சிவப்பு எச்சரிக்கை இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் அனர்த்த அபாய நிலைமை நீடிப்பதால் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கும் பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்குமாக மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்களும் பொது மக்களும் தயார் நிலையில் இருப்பதற்கான அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அனர்த்த கட்டுப்பாடு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் மிக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்ற கல்முனை மாநகர சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும் சிவில் முக்கியஸ்தர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.