வெள்ளத்தில் மூழ்கியுள்ள வசந்தபுரம் கிராமத்தை நோக்காமையால் இம்மக்கள் போராட்டத்தில் குதித்தனர்

எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மன்னார் பேசாலைக்கு அருகாமையிலுள்ள வசந்தபுரம் குக் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியபோதும் எவரும் கவனிக்கின்றார்கள் இல்லையென தெரிவித்து மன்னார் தலைமன்னார் பிராதன வீதியை மறித்து தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் திங்கள் கிழமை (25) காலையில் இடம்nhற்றது.

ஓரிரு தினங்களாக மன்னார் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மன்னார் பகுதி பெரும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுவதுடன் பலர் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தினால் எற்பாடு செய்யப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் பலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கும் இடம்பெயர்ந்து தங்கி வாழ்ந்து கொண்டிருங்கின்றனர்.

இதே வேளையில் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வசந்தபுரம் என்னும் ஒரு குக் கிராமமும் முற்றாக மழை வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகின்றபோதும் இவர்கள் அருகில் எங்கும் இடம்பெயர்ந்து போக முடியாத நிலை இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தங்களின் நிலைமையை எவரும் நேரடியாக வந்து பார்த்து கவனிக்கவில்லையென தெரிவித்து இக்கிராம மக்கள் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியை மறித்து தங்கள் நிலையை யாவரும் நோக்க வேண்டும் என்று தெரிவித்து ஆர்பாட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இதனால் இப்பாதையினூடாக போக்குவரத்துக்கள் ஒரு சில மணி நேரம் தடைப்பட்டதுடன் பிரயாணிகளும் பெரும் அசௌரியங்களுக்கு உள்ளாகினர்.

இதை அறிந்து தலைமன்னார் பொலிசார் இப்பகுதிக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருகை தந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் இம் மக்கள் தங்குவதற்கு கொட்டில்கள் அமைத்து தங்க வைக்கவும் உடனியாக சமைத்த உணவு வழங்கவும் குடிநீர் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் உடன் செய்து கொடுத்துள்ளதாக இம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வசந்தபுரம் குக் கிராமத்தில் வாழும் மக்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதியிலிருந்து யுத்தக்காலத்தின்போது மன்னாருக்கு இடம்பெயர்ந்து பேசாலையில் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டு பின் 2008 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் குடியேற்றப்பட்டவர்கள்.

இங்கு 60 குடும்பங்களைச் சார்ந்த 150 பேர் வசிப்பதாகவும் 4 வீடுகள் மட்டுமே கல் வீடாகவும் ஏனையவைகள் கொட்டில்களாகவும் காணப்படுவதுடன் எந்த பொது மண்டபவமோ அடிப்படை வசதிகளோ அற்ற கிராமமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(வாஸ் கூஞ்ஞ)