பலத்த மழைக்கு மத்தியில் ஆர்வத்துடன் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

பலத்த அடைமழை மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்டத்தில் க.பொ.த. உயர் தரப்பரீட்சை இன்று(25) ஆரம்பமானதுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை ஆரம்பித்ததுடன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையிலும் பரீட்சை நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழை வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் தாக்கம் செலுத்தியபோதும் மாணவர்கள் இறைவழிபாட்டின் பின்னர் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகி வருகை தந்தைதையும் அவதானிக்க முடிந்தது.
ஆயினும் பெற்றோர்கள் பலர் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்ததுடன் பரீட்சைக்கு சமூகமளிப்பதில் மாணவர்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டதாக கவலையுடன் சிலர் உரையாடியதையும் அவதானிக்க முடிந்தது.
வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பரீட்சை நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கல்வித்திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வி.சுகிர்தகுமார்