மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. மக்களின் இடம்பெயர்வும் தொடர்கின்றது. மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் அனர்த்த மூகாமைத்துவ அதிகாரிகள் அரச வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களை பார்வையிட்டு செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் அதிகமான இடங்கள் வெள்ளக் காடுகளாக காட்சி அளித்து வருகின்றது
மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மன்னார் தீவு பகுதி மக்கள் மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் வெள்ள நீர் கடலுக்குள் செலுத்துவதற்கான சரியான வடிகால் அமைப்பு மேற்கொள்ளப்படாமையால் மன்னார் தீவு பூராகவும் காடுகளிலும் வீடுகளிலும் தெருக்களும் வெள்ளக் காடுகளாகவே காட்சி அளிக்கின்றது.
மன்னார் பெரும்பரப்பில் பெரும்பாலான வயல்கள் நிரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் மன்னார் தீவில் 2074 குடும்பங்களைச் சேர்ந்த 7916 நபர்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் தெரிவித்தார்.
அத்துடன் 222 குடும்பங்களைச் சேர்ந்த 781 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 173 குடும்பங்களைச் சார்ந்த 556 நபர்களுக்க சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மன்னார் தீவில் சௌ;ளத்தால் பாதிப்படைந்து வரும் மக்களின் நலன் கருதி ஆறு நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எழுத்தூர் செல்வநகர் முத்துமாரி கோவிலில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 57 நபர்களும் . அன்னை திரேசா பாடசாலையில் 56 குடும்பங்களைச் சார்ந்த 305 நபர்களும் பேசாலை சென் மேரிஸ் பாடசாலையில் 26 குடும்பங்களைச் சார்ந்த 75 நபர்களும் , அல்மினா வித்தியாலயத்தில் 6 குடும்பங்களைச் சார்ந்த 20 நபர்களும் . ஓலைத்தொடுவாய் பாடசாலையில் 53 குடும்பங்களைச் சார்ந்த 156 பேரும் , பேசாலை முருகன் கோவிலில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் தொடர்ந்து மழை தொடருமாகில் இடம்பெயரும் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகின்றது.
அத்துடன் வெள்ள நீருடன் பாம்புகளும் அடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரத்தில் மன்னாரில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை தேசிய மக்கள் சக்தி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வத்தம்பி திலக்நாதன் மற்றும் ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் வங்காலை . மன்னார் , தாழ்வுபாடு மற்றும் மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களையும் நீரில் மூழ்கியுள்ள வயல் நிலங்களையும் நேரில் சென்று இங்குள்ள அதிகாரிகளுடம் பார்வையிட்டு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)