ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை

பத்தாவது பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் தனது சிம்மாசனப் பிரசங்க உரையினை 14.11.2024 அன்று நிகழ்த்தி இருந்தார்.

அந்த உரையில், புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினை பற்றியோ அதற்கான நியாயமான தீர்வு பற்றியோ கருத்தினை முன்வைக்கவில்லை. அது தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.

ஈழத்தமிழர்கள் சுதந் திரத்தின் பின்னர்,76 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இரண்டாம் மட்ட பிரசைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இலங்கையின் சுதந்திரம் என்பது 74 சதவீதமான சிங்கள மக்களுக்கு வரையறுக்கப்பட்டதாக சிங்களத் தலைவர்கள் நினைக்கிறார்கள்.26 சதவீதமான தமிழ் பேசும் மக்களுக்கு அந்த சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.

இதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுகள் அறவழியில் போராடி இருந்தார்கள். அப்போராட்டத்தினை பேரினவாதம் கண்டு கொள்ளவில்லை. தீர்வும் வழங்கவில்லை.

அதனையடுத்து 30 ஆண்டுகள் தமிழ் இளைஞர்கள் குறிப்பாக விடுதலைப் புலிகள் 30 ஆண்டுகள் பலமான ஆயுதப் போராட்டத்தினை ஒழுக்கக் கட்டுக்கோப்புடன் நடாத்தினார்கள். அப்போராட்டம் உலகத்தின் பார்வையைத் திருப்பியது. இருந்தாலும் 22 இற்கு மேற்பட்ட நாடுகளின் ஒத்துழைப்புடனும்,உள்ளகக் காட்டிக் கொடுப்புடனும் அப்போராட்டம் மெளனிக்கச் செய்யப்பட்டது.

போராட்டம் மெளனிக்கப்பட்டாலும் அந்தப் போராட்டத்திற்கான நியாயம் இருக்கவே செய்கின்றது.போரின் பின்பும் பேரினவாத ஆளும் கட்சிகள் தமிழர்களுக்கான இனப்பிரச்சினைக்குரிய தீர்வைத் தரவில்லை.

பச்சைக் கட்சி,நீலக் கட்சி ஏமாற்றியது போல் சிவப்புக் கட்சியும் தீர்வு விடயத்தில் ஏமாற்றம் தருவார்களோ என்ற சந்தேகம் ஜனாதிபதியின் சிம்மாசனப் பிரசங்க உரையில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

இனவாதம் மதவாதம் போன்ற அடிப்படை வாதங்கள் இனி இருக்காது என்று ஜனா திபதி குறிப்பிட்டார். சட்டவாட்சி, ஜனநாயகம் பலப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஊழல் மோசடிகள் இடம்பெறாது என்ற கருத்தும் கூறப்பட்டது.

இவற்றை தமிழர்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு கூறப்படவில்லை.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிக் கூறப்படவில்லை.
மொத்தத்தில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறிப்பிடாமை தமிழர்களுக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

மேலும் மதவிவகாரங்களுக்கான அமைச்சினைத் தவிர்த்து பௌத்தசாசன அமைச்சு பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடும் மதவாத சிந்தனையில் இருந்து புதிய அரசாங்கமும் விடுபடவில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது. எது எப்படியாக இருந்தாலும் ஜனாதிபதியின் முற்போக்கான சிந்தனைகளைத் தமிழர்கள் கவனத்தில் கொண்டுள்ளார்கள்.இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தைத் தமிழரசுக்கட்சி என்றும் மறக்காது முன்னெடுக்கும்.
ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு