மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மாந்தை மேற்கு 36 கிராம அலவலக பகுதிகளில் மழை நீhனால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் , முருங்கன் , உயிலங்குளம் போன்ற இடங்களில் அதாவது கட்டுக்கரைக்குளம் பகுதிகளில் தாழ்ந்த பிரதேசங்களில் மழை நீரால் பெருந் தொகையான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கழிவு நிர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு வருவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேசாலை நடுக்குடா மாந்தை மேற்குப் பகுதிகளில் கான்கள் மற்றும் வாய்க்கால்களை இரவுரவாக வெட்டி நீரை கடலுக்கு பாய்ச்சும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இதேநேரத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மன்னார் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகமைத்துவ பிரிவு 0232117117 . பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகத்திற்கு தெரியபடுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் மன்னார் மீனவர்களை இன்றிலிருந்து (23) எதிர்வரும் 27ந் திகதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் கடற்கரையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தங்கள் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளும்படியும் மீனவர்களுக்ர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)