மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கி சென்கொங் Qi zhenhong இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (20) திகதி மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.
இதில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள் என பல அடங்குவதுடன், கல்வித்துறை, மருத்துவதுறை, தொழிற்துறை, தொழிற்பயிற்சி வழங்குதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் அபிவிருத்தி, மாணவர்கள் பாடசாலை இடைவிலகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது சீனத்தூதுவர் தற்போது இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்கியுள்ளதுடன் கொவிற் தொற்று பாதிப்புற்றிருந்த காலத்தில் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு தேவையான தடுப்பு ஊசி மருத்துகளை வழங்கியதாகவும், கிழக்கு பல்கலைக்கழத்திற்கு பல புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதையும், பொருளாதார விழ்ச்சி ஏற்பட்ட போது கிழக்கு மாகாண மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதையும், அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவதற் தேவையான நடவடிக்கை மேற்கொண்டதாகவும் இதன் போது தூதுவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த கலந்துரையாடலில் சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேனி பிரதேசத்தில் சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை சீன தூதுவரினால் நாளை (21) திகதி கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு