இச்சறுக்கலில் இருந்து பாடம் கற்று மீள் எழுச்சி கொள்வதே எமது அடுத்த கட்ட இலக்காகும்.ஜனா

கடந்த கால அரசாங்கங்கள் தமிழ்த் தேசியத்துடனும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் நேரடியாக மோதியது. ஆனால், தற்போதைய அரசாங்கமும், கட்சியும், ஜனாதிபதியும் தமிழ்த் தேசியத்தையும், தமிழர்களின் பிரச்சனைகளையும் கறையான் உள்ளால் அரிப்பது போன்ற செயற்பாடுகளையே மேற்கொள்ளும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான, முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் எனது குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றிகள்.

இது எமது தோல்வி அல்ல எமக்கு ஏற்பட்ட சிறு சறுக்கலே இதுவாகும். இச்சறுக்கலில் இருந்து பாடம் கற்று மீள் எழுச்சி கொள்வதே எமது அடுத்த கட்ட இலக்காகும்.

ஒரு காலத்தில் ஆட்சி செய்த தேசியக் கட்சிகளே அடுத்த ஆண்டு எட்டு ஆசனங்களை மாத்திரம் எடுத்த வரலாறும், அக்கட்சியே அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றமையும் நாம் கண்டுள்ளோம்.

ஏன்..? இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு மூன்று ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இருந்த ஜே.வி.பி இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாக 159 ஆசங்களுடன் வரவில்லையா…? எனவே எமக்கு இது பெரும் தோல்வியல்ல. அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரம் இடுவதற்கான வாய்ப்பே ஆகும்.

எமது இலக்கு நோக்கிய இலட்சியப் பயணம் இலக்கை எட்டும்வரை தடையின்றித் தொடரும்.

மீண்டும்…
எம்மை ஆதரித்தோர், எம்மை விமர்சித்தோர், எம்மை எள்ளி நகையாடியோர் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்.

தோல்வியிற்றுவழ்வது போன்ற வரலாறு எம்போன்ற போராளிகள் வாழ்வில் கிடையாது. தோல்வியை வெற்றியாக்குவதே எமது இலக்கும், இலட்சியமும் ஆகும்.

வடக்கு கிழக்கிலே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி திருகோணமலை மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது. திருகோணமலையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்து போட்டியிட்டோம் அந்த வகையில் கணிசமான அளவில் எமது மக்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கான ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த வகையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எமது மக்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தத் தேர்தல் தமிழ் தரப்பிற்குப் பாரியதொரு பாடத்தினைப் புகட்டியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த் தரப்பினர் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் தமிழ்த் தேசியம் எங்கு செல்லும் என்பதை அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம்.

கடந்த காலத்திலே ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ்த் தேசியத்துடனும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் நேரடி மோதல்களிலே ஈடுபட்டார்கள். அதேபோன்று அவர்களது ஆட்சியும் வேறுவிதமாக இருந்தது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம், இந்தக் கட்சி, இதன் ஜனாதிபதி தமிழ்த் தேசியத்தையும், தமிழர்களின் பிரச்சனைகளையும் கறையான் உள்ளால் அரிப்பது போன்ற செயற்பாடுகளையே மேற்கொள்ளும். அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமேயானால் எதிர்காலத்தில் நாங்கள் எங்களுக்குள்ளே உள்ள விருப்பு வெறுப்புகளைத் துறந்து அனைவரும் ஒற்றிணைந்து செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களின் எதிர்காலம் சூனியமாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்.