வீட்டுக்காக உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் நன்றிகள்.

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சிக்காக அம்பாறை மாவட்டத்தில் உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
 இவ்வாறு  கல்முனை பிராந்தியத்தில் நேற்று தனக்களிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் நன்றிகள் தெரிவித்து உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் .
கல்முனை குருந்தையடியில் இடம்பெற்ற முதலாவது வரவேற்பு நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் …
இம்முறை அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமது இருப்பை காப்பாற்றி இருக்கின்றார்கள். அடையாளத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். நன்றிகள் .
எனினும் 50 வீதத்துக்கு மேலானவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த தவறியிருக்கின்றார்கள் .இது மிகவும் கவலைக்குரிய விஷயம் .எமது மாவட்ட நிலைமையை கருத்தில் கொண்டு நிச்சயமாக அவர்கள் வாக்களித்து இருக்க வேண்டும் .
ஆனால் 50 வீதமான தமிழ் வாக்காளர்கள் ஏனோதானோ என்று இருந்தது உண்மையில் மனவருத்தற்குரியது.
 எதிர்காலத்தில் இப்படியான அரசியல் விருப்பில்லாததன்மை மற்றும் அலட்சியம் இருக்கக் கூடாது. வாக்களித்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை கூறுகின்றேன்.
அதன் பின்னர் கல்முனை பெரியநீலாவணை பாண்டிருப்பு நாவிதன்வெளி  போன்ற பல ஊர்களுக்கும் சென்று மக்களுடன் கலந்துரையாடி நன்றிகள் தெரிவித்தார்.அங்கு மக்கள் பெருவாரியாக திரண்டு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.