தமிழ் மக்கள் வழக்கமாக, காலம் காலமாக இடம் பெற்றுவரும் தேர்தல்களில், தனிமனித நலனை முன்னிலைப்படுத்தாது, தமிழ்த் தேசிய இனத்தின் கூட்டு நலனை முன்னிலைப்படுத்தி, தமது வாக்குகளை செலுத்தி, தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள்.
அதே போல, நவம்பர் 14, 2024 ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீலங்காவிற்கான பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரண்டு, எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறும் , மாபெரும் வீரமும் உயரிய தியாகமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்திற்கும் மத்தியில், இன்றும் ஓயாது தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்திற்கு வலுச்சேர்க்கக்கூடிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.
ஸ்ரீலங்காவில் தொடர்ந்து ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டிய தமிழர் தேசத்திற்கான அரசியல் தீர்வை நிராகரித்தும், ஸ்ரீலங்காவின் “ஒற்றையாட்சிக் கட்டமைப்பை” தொடர்ந்து திணித்தும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையால் உருவாக்கப்பட்ட அனைத்துலக விசாரணை மற்றும் பொறுப்பு கூறலுக்கான பொறிமுறைகளை நோக்கிய தீர்மானங்களை நிராகரித்தும், தமிழின அழிப்பை புரிந்தவர்களுக்கான பொறுப்பு கூறலை நிராகரித்தும் வந்துள்ளனர். தற்போதைய அரசாங்கமும் இவ்வாறான பாதையில் பயணிக்க முனைவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே தமிழின அழிப்புக்கான அனைத்துலக பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பவற்றை ஏற்றுக்கொண்டு இவற்றை அடைவதற்காக உழைப்பதிலும், அத்தோடு தமிழ் மக்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அனைத்து கூறுகளின் சிதைவை தடுத்து நிறுத்துவதிலும் அவற்றை மீள்கட்டுமானம் செய்வதிலும், அர்பணிப்போடும், உண்மையாகவும் மற்றும் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடிக்க கூடிய ஆளுமைமிக்க வேட்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தெரிவுசெய்து, தமிழ் மக்களின் தெளிவான தெரிவாக பாராளுமன்றம் அனுப்புவதே காலத்தின் தேவையாகும். அத்தகைய வேட்பாளர்களுக்கு தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) கேட்டுக்கொள்கிறது.
தேர்ந்தெடுக்கப்படும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தமிழ் தேசிய நலனை முன்னிலைப்படுத்தி, தமிழ் சிவில் சமூகத்துடனும் புலம் பெயர் தமிழ் சமூகத்துடனும் ஒன்றிணைந்து, ஒரு பலமான பொது கூட்டிணைவுடன் தமிழ் தேசிய இனத்தின் வேணவாவை நிறைவேற்றுவார்களென, கனடிய தமிழர் தேசிய அவை எதிர்பார்த்து நிற்கின்றது.
நன்றி,
கனடியத் தமிழர் தேசிய அவை