தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை. கல்வியும் இல்லை.பொருளாதாரம் இல்லை. சமூக கட்டமைப்பும் இல்லை. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்து சேறு பூசுவதற்காக தான் எல்லோரும் வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கி.லிங்கேஸ்வரனின் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை. கல்வியும் இல்லை.பொருளாதாரம் இல்லை. சமூக கட்டமைப்பும் இல்லை. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்து சேறு பூசுவதற்காக தான் எல்லோரும் வருகிறார்கள்.ஒருவர் சட்ட முதுமாணி சட்டத்தரணி என்று வருகின்றார். அடுத்தவர் தொழிலதிபர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர் கோடிக்கணக்கான பணத்தினை செலவு செய்கின்றார். இதற்கு முன்னர் இருந்த காலத்தில் ஏன் அவரால் ஒரு வீட்டு திட்டத்தை கட்டிக் கொடுத்திருக்க முடியாது. அடிப்படை வசதி கூட இல்லாத பிரதேசங்கள் இருக்கின்றன.ஏன் அவற்றை அபிவிருத்தி செய்யவில்லை. தேர்தல் காலத்தில் தேர்தல் கட்டளை சட்டத்தை மீறி அவர் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அவரது நடவடிக்கைகள் ஆழமாக ஊடுருவிக் கொண்டு வருகின்றது. ஒரு தேர்தல் காலகட்டத்தில் தேர்தல் கட்டளை சட்டத்தை மீறி வீதிகளை நிர்மாணிக்கின்றார் என்று கூட எனது காரியாலத் திறப்பு விழாவில் பகிரங்கமாக கூறியிருந்தேன்.பின்னர் ஊடகத்தில் பெயரும் சொல்லி இடமும் சொல்லி பகிரங்கமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது .அதை தாண்டி அவர் இன்று ஐந்து கிலோ அரிசி சீனி உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வாக்கினை கேட்கின்றார்.கிரசர் தூளையும் சாராயத்தையும் தொடர்ச்சியாக வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்.இன்றோடு அதனை அவர் கைவிட வேண்டும் . இன்றேல் இவர் தமிழினத் துரோகியாக கணிக்கப்படுவார்.அம்பாறையில் இந்த நிமிஷம் வரைக்கும் தமிழர் ஒருவர் எம். பியாகும் வாய்ப்பு இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன் . எனவே இருக்கின்ற இரண்டு நாட்களை உச்சளவு பயன்படுத்துங்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுமா ?என்பதை இந்த தேர்தல் தான் சொல்ல வேண்டும்.கடந்த வருடம் தமிழரசுக் கட்சியும் அம்மானும் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள் .இம்முறை தமிழரசுக் கட்சி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி தனியாக போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழக்க போகின்றது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் கலையரசன் ஆகியோர் இருந்து என்ன செய்தார்கள்?
காரைதீவைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களை நான் மதிக்கின்றேன் நல்லதொரு சமூக சேவையாளர் .நான் போற்றுகிறேன். வாழ்த்துக்கள்.ஆனால் அண்மையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை வெட்கப்பட வேண்டியது. ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஜனாதிபதி சபாநாயகர் அடுத்து எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன். அவரே அதனை செய்யவில்லை. அப்பொழுது இவர் இங்கு தவிசாளராக இருந்தார். அப்போதும் செய்யவில்லை .இப்ப மட்டும் இது முடியுமா? அதுவும் இலங்கையில் தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்று யாரும் இல்லை இலங்கையர் மட்டுமே என்று கூறுகின்ற ஜனாதிபதி அனுர இருக்கும் இன்றைய நிலையில் இது சாத்தியமா?
பெரிய நீலாவணையில் அரச உத்தியோகத்தர் ஜேவிபிக்காக ஆதம்பாவா அன்ரனிக்காக வாக்குகளை சேகரிக்கிறார்.இதனால் சிங்களவர் முஸ்லீம் வருவதற்கு மாத்திரமே வாய்ப்பு இருக்கிறது என்பதனை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் .இவரை காலமும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் பொத்துவில் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இருக்கிறார்கள் . ஏன் கல்முனை தொகுதியில் இம்முறை அந்த பாராளுமன்ற உறுப்பினர் வர முடியாது? இங்குள்ள வேட்பாளர்களுக்கு அப் பகுதி மக்கள் வாக்களிக்க ஏனையோர் ஆலோசனை வழங்க வேண்டும்.திருக்கோவில் கடற்கரை பிரதேசத்தில் ஜெயதிலக என்பவர் ஆயிரக்கணக்கான காணியை வாங்கி வருகிறார் .இவர்கள் இதை அறிவார்களா? சந்திரிகாவின் குண்டு துளைக்காத வாகனத்தில் வலம் வந்த சம்மந்தர் ஒரு நாளாவது வந்து கல்முனை உண்ணாவிரதத்தை எட்டிப் பார்த்தாரா?இல்லை. இவர்களை நம்பி இன்னும் ஏமாற வேண்டுமா? மக்களே! அம்பாறை மாவட்டத்தில் சங்குதான் தமிழ் மக்களை ஆளப் போகிறது .ஆகவே அதற்கு வாக்களித்து நீங்கள் வெற்றிவாகை சூடுங்கள்.என்றார்.
குறித்த பிரசார கூட்டத்தில் ஏனைய வேட்பாளர்களான லிங்கேஸ்வரன், இரா. பிரகாஷ் ஆகியோரும் உரையாற்றினர்.