அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் வாழும் அனைத்து இனத்தவர்கள் மத்தியிலும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் உள்ளன. அப்பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகவும் புரிந்துணர்வு ரீதியாகவுமே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சமூகத்தினை வீழ்த்தி இன்னுமொரு சமூகம் வெற்றி கொள்தல் எனும் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேண்பாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஊடகவியலாளர் மாநாடு இன்று(10) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தமொன்று நடைபெற்ற நம் நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறான பிரச்சினைகள் இருக்கும். அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் நாம் பிரிந்து நின்று போட்டி மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக் கூடாது. பேசித் தீர்த்து வைக்க முடியாமல் எந்தவொரு பிரச்சினையும் நம்நாட்டில் இல்லை.
போட்டி மனப்பான்மையுடன் நாம் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுகின்றபோது பல பிரச்சினைகள் எழுவதற்கான சாத்தியப்பாடுகள் உண்டு. ஒவ்வொரு சமூகத்தவர்களைப் பொறுத்த வரையில், யார் தோல்வி அடைந்தாலும், யார் வெற்றி பெற்றாலும் சில வடுக்கள் ஆறாத காயமாக பரம்பரை பரம்பரையாக தொடரக் கூடிய நிலை தோற்றம் பெறும் இதனால் எம்மத்தியில் பகைமையும் பிரச்சினைகளும் தீராமலேயே போய்விடும்.
எந்தவொரு விடயத்தினைப் பொறுத்தவரையிலும், எந்தவொரு சமூகத்தின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் உரிமையினையும் சுதந்திரத்தினையும் புறந்தள்ளி விட்டு இன்னுமொரு சாரார் வெற்றி கொள்வதால் அதில் பயனேதுமில்லாமல் போய்விடும். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை தீர்வின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் மதிப்பளித்து பெறுகின்றபோது எம்மத்தியில் ஒற்றுமை நிலைநாட்டப்படும்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான செல்வாக்கு இருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடந்த இருபது வருடங்களுக்குப் பின்னர் இம்மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றது. இக்கால கட்டத்தில் இம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற தூய எண்ணத்தின் அடிப்படையிலேய நாம் எமது கட்சியில் தனித்து போட்டியிடுகின்றோம்.
அம்பாறை மாவட்டத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்து விடக் கூடாது. முஸ்லிம் மக்களுடைய பாராளுமன்ற பிரதிநிதிதுவம் குறையாமல் இருக்கவும், எமது முஸ்லிம் மக்களுடைய வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை இனத்தை சேர்தவர்கள் பாராளுமன்ற செல்லும் ஆபத்தினைக் கருத்திற் கொண்டுதான் நாம் இம்முறை எமது கட்சியில் தனித்து போட்டியிடுகின்றோம். எமது கட்சிக்கு அதிகப்படியான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கின்றபோது எமது மக்களுக்கு அதிகமான நன்மைகள் கிட்டும். எமது கட்சி தனித்து போட்டியிடும் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அதிகம் அதிகமான வாக்குகள் கிடைக்கின்றபோது தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்களாக இருந்தால் மூன்று அல்லது இரண்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும. இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் முரண்பாடுகளில் இருந்த எமது கட்சிக்காரர்களை தனித்தனியாக சந்தித்து நாங்கள் ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றோம். அதனால் கடந்த காலங்களை விட தற்போது எமது கட்சிக்கு அதிகமான ஆதரவு உண்டு.
நான் மாகாண அமைச்சராக கடந்த காலங்களில் செயற்பட்ட போது மூவின சமூகத்திற்கும் பல்வேறான அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கின்றேன். அபிவிருத்தி மூலமாக சமூக ஒற்றுமையினையும் புரிந்துண்வினையும் கட்டியெழுப்ப முடியும் எனும் விடயத்தினை நிலை நாட்ட முடியும் என்பதனூடாக நாம் பல பணிகளை இம்மாவட்ட மக்களுக்காக செய்திருக்கின்றோம்.
இம்மாவட்ட மக்களுக்காக நாம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்திருக்கின்றோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு புறமுதுகு காட்டாது முன்னின்று நாம் குரல் கொடுத்திருக்கின்றோம். எமது பிராந்திய மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் பிளவுகளையும் பிரச்சினைகளையும் கைவிட்டு அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்னும் நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எம்மவர்கள் நமது மக்களின் உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து சுயநலம் மறந்து செயற்பட வேண்டும். நமது கட்சியினைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நமது மக்களின் நலனை மறந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமையால் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் விடயத்திலும் அவர்கள் எதிர்ப்பினை சம்பாதித்தார்கள் என்றார்.