2024 ஆண்டு நவம்பர் மாதம் 14 திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பீ.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்காக வேண்டி 22 அரிசிய கட்சிகள் மற்றும் 27 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், கல்குடா தொகுதியில் இருந்து 134,104 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 210,293 பேரும் பட்டிருப்பு தொகுதியில் இருந்து 105,289 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்,
தபால் மூல வாக்களிப்பிற்காக 14003 பேரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெறவுள்ளதுடன், இதில்
கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும்
மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும்
பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.
அதே வேளை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 46 வாக்கெண்னும் நிலையங்களில் வாக்கெண்னும் பணிகள் இடம் பெறவுள்ளது, அதில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்காக 37 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக 300 இற்கும் அதிகமான வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் தனியார் பஸ்கள், அரச வாகனங்கள், தனியாருக்கு சொந்தமான வன்கள் போன்றவை பயன்படுத்தப்படவுள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிநாட்டு மற்றும் பெப்றல் போன்ற சில அமைப்புக்களும் முழு நேரமாகவும், நடமாடும் கண்காணிப்பாளர்களர்களாகவும் தேர்தல் தினத்தன் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,
1917 பொலிசார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் விசேடமாக தேர்தல் கடமைகளுக்காக பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் ஆக குறைந்த 2 வாக்காளர்களுக்கான வாக்களிக்கும் நிலையமாக இருந்து வந்த மாந்தீவு வாக்களிப்பு நிலையமானது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதே போன்று பாராளுமன்ற தேர்தலிற்கும் அவர்கள் வாக்களிப்பதற்காக புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மண்பட இலக்கம் 3 இல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.