யாழ்ப்பாண மாவட்ட இளைஞர்-யுவதிகள் டொலரில் சம்பாதித்து ரூபாவில் செலவு செய்யக்கூடிய வசதியாக நிலைமையை பத்து வருடங்களில் ஏற்படுத்திக் கொடுப்போம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
07/11 வியாழக்கிழமை வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் மக்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்;
நாம் அரசில் இருந்தாலும்-இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
நான் எதிர்கட்சியில் இருந்து கொண்டும் எனது சொந்த நிதியில் யாழ்ப்பாணத்தில் ஒன்பது இடங்களில் இலவச கணணி கற்கை நிலையங்களை நிறுவி கணணி மற்றும் தொழில்நுட்பக் கற்கைகளை வழங்கி வருகிறேன்.
அத்துடன் மேற்படி கற்கையை முடித்த பின்னர் எம்மால் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக வீடுகள் மற்றும் கற்கும் பாடசாலைகளில் கணணி வசதி இல்லாத மாணவர்களை மையப்படுத்தியே என் கனவு யாழ் என்ற இலவச தொழில்நுட்ப கற்கை நிலையம் இயங்கி வருகின்றது.
இன்று யாழ் மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்-யுவதிகள் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்துவிட்டு வேலைவாய்ப்பின்றி இருந்து வருகின்றனர்.
இதனால் இளைஞர்கள் வழி தவறிப் போகின்ற நிலைமை மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்த நிலைமை மாற வேண்டுமானால் எமது இளைஞர்- யுவதிகள் உலக வேலைச் சந்தைக்குச் தேவையான தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான அடித்தளமே எம்மால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் 1200பிள்ளைகள் விகிதம் யாழ் மாவட்டத்தில் பத்தாயிரம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கற்கையை போதிக்கின்றோம்.
அடுத்த பத்து வருடங்களில் மாவட்டத்தில் 25ஆயிரம் மாணவர்களை உலக தொழிற்சந்தைக்கு தகுதியானவர்களாக மாற்றி இலங்கையில் இருந்து கொண்டே வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதே எமது இலக்கு என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.