மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்பதாக இருந்தால் அது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாகத்தான் கிடைக்கும்.
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் ஒரு முஸ்லிம் எம்.பி. வர முடியாது என்று முன்னாள் ஆளுநரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி – நாவலடி கேணிநகர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
ஒருவர் எம்.பி. ஆக வேண்டுமென்றால் 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும்.
காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி உள்ளிட்ட பிரதேச மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரம்தான் எம்.பி.எடுக்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பகுதியில் இம்முறை 90,000 வாக்குகள் அளிக்கப்படவுள்ளன.
அதில், 55,000 பேர் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தலில் மேலதிகமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்காக வேண்டிதான் நாங்கள் கூட்டம் போட்டுப் பாடுபடுகின்றோம்.
எங்களது கட்சிக்கு ஒரு எம்.பி. வருவதென்றால் நாங்கள் கூட்டமெல்லாம் போடத் தேவையில்லை. ஏனென்றால் எங்களது கட்சிக்கு இலகுவாக 44,000 வாக்குகள் கிடைக்கும்.
நாங்கள் கூட்டம் போட்டு பேசுவதெல்லாம் 55,000 க்கு மேற்பட்ட வாக்குகளை எடுத்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிதான்.
பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைக்க ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை.
ஆட்சி அமைப்பதற்கு தேவை என்றால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நான் பாராளுமன்றத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இருந்துள்ளேன்.
நான் அவருடன்தான் காலை, பகல், இரவு உணவுகளை உண்டுள்ளேன்.
நாங்கள் எப்பொழுதும் ஜனாதிபதியின் கட்சிதான்.
நாங்கள் அரசாங்கத்துடன் இருந்து பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
ஜனாதிபதி ஊழல், இலஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பதாக சொல்லி இருக்கிறார்.
அத்துடன், பொருட்களின் விலைகளைக் குறைத்து, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இது போன்ற பல நல்ல விடயங்களை சொல்லி இருக்கிறார் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.