-மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிருவிருத்தியில் பின் தங்கிக் காணப்படுவதால் மன்னார் நோக்கியும் மிக கவனம் செலுத்தும்படி மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தன்னை சந்தித்த பிரதமரிடம் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தனது கட்சியான தேசிய மக்கள் சக்தி தேர்தல் பரப்புரைக்காக திங்கள் கிழமை (04) மன்னாருக்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை மரியாதையின் நிமித்தம் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஒரு சில மணி நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது மன்னார் மறைமவாட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் , மடு பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் . குடும்ப பொது நிலையினர் பணியக இயக்குனர் அருட்பணி இ.அகஸ்ரின் புஸ்பராஐ; அடிகளார் , முன்னாள் குருமுதல்வர் ஏ.விக்ரர் சோசை அடிகளார் மூத்த அருட்பணியாளர் எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை உட்பட ஆயர் இல்ல முக்கிய அருட்பணியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆயர் அவர்கள் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லுகையில் மன்னார் மறைமாவட்டத்துக்கு சொந்தமான மற்றும் பொது மக்களின் காணிகள் மற்றும் வயல் நிலங்களுக்கு உறுதிகள் இருக்கின்றபோதும் வன இலாக மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் அடாத்தாக அபகரித்து வரப்படுவதையும்
மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு மற்றும் காற்றாலை அமைப்பதனால் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும்
எந்த அரசு ஆட்சிக்கு வருகின்றபோதும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தப்படாது இருப்பதாகவும்
குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தியானது மந்த கதியிலேயே காணப்படுவதால் பிற மாவட்டங்களை நம்பியே இங்குள்ள நோயாளர்கள் காணப்படுவதாகவும் பிரதமருக்கு சுட்டிக்காட்டியதுடன்
இவ்வாறு மன்னார் மாவட்டத்தின் பல தேவைகளையும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியங்களையும் எடுத்துரைத்தார்.
ஆயர் மற்றும் அவரின் குழுக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளை கேட்டறிந்த பிரதமர் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் ஆயர் இல்லம் வந்திருந்தபொழுது இதன் ஞாபகர்த்தமாக மருத மடு அன்னையின் திருச்சுரூபமும் பிரதமருக்கு ஆயரால் கையளிக்கப்பட்டது.