பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் அதிபர் அமரர் குணராசாவின் திடீர் மறைவானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, பெரிய நீலாவணை மக்களுக்கும் எமக்கும் பேரதிர்ச்சியையும் பெருந்துயரினையும் ஏற்படுத்தியுள்ளது எனக் கல்முனை அதிபர் சங்கச் செயலாளர் ஏ.ஜி.எம். றிசாத் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், அமைதியாகவும் ஆரவாரமற்ற முறையிலும் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் அதிபர் குணராசா, ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய காலங்களில் கல்விச் சமூகத்துக்கு தன்னால் இயன்ற மகத்தான பல சேவைகளைச் செய்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
அத்தோடு தான் இறுதியாகக் கடமையாற்றிய பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அந்த பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் இரவு, பகல் பாராது மிக அர்ப்பணிப்புடன் அரிய பல சேவைகளைச் செய்துள்ளார்.
தான் கடமையாற்றிய சகல பாடசாலைகளிலும் மாணவர்களின் கல்வி விடயத்தில் மட்டுமன்றி, அவரது ஒழுக்கம், பண்பாடு போன்ற விடயங்களிலும் அமரர் அதிபர் குணராசா அதிகம் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை கல்வி வலய அதிபர்கள் சார்பாக அதிபர் சங்கச் செயலாளர் ஏ.ஜி.எம் றிசாத் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.