என்னால் 45ஆயிரம் இலட்சங்களை கொண்டு வர முடிந்ததென்றால் ஏன் ஏனையவர்களால் முடியவில்லை

அங்கஜன் எம்.பி கேள்வி.

த.சுபேசன்
தனி ஒருவனாக என்னால் கடந்த 4வருடங்களில் 45ஆயிரம் இலட்சங்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு கொண்டு வர முடிந்ததென்றால் ஏன் ஏனைய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது முடியாமல் போனது என ஜனநாயக தேசிய கூட்டணியின் பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்படி கேள்வி எழுப்பியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மக்களைத் தேடி அடிக்கடி வரும் பாராளுமன்ற உறுப்பினராக நான் இருக்கிறேன்.தேர்தல் அறிவிக்க முன்னரே அபிவிருத்தி நோக்கில் பல தடவைகள் மக்களைச் சந்தித்திருக்கிறேன்.
எனவே மக்களைத் தேடி அடிக்கடி வருபவர்களை தெரிவு செய்யப் போகின்றீர்களா? அல்லது தேடி வருபவர்களையும் வராமல் தடுக்கப் போகிறீர்களா? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
நான் கடந்த 2020ஆம் ஆண்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தேன்.அதன் பின்னர் கடந்த 4வருடங்களில் 45ஆயிரம் இலட்சம் ரூபாய்களை மாவட்டத்திற்குப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.அதனுள் வீட்டுத்திட்டம்,வாழ்வாதாரம் ,மின்சார இணைப்பு,விவசாய திட்டங்கள் ,மைதான அபிவிருத்தி என அனைத்தும் அடங்குகின்றன.
தனி ஒருவராக என்னால் 45ஆயிரம் இலட்சங்களை எடுத்து வந்து அபிவிருத்தி செய்வது சாத்தியமாகின்றது என்றால் ஏன் ஏனைய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அது முடியாமல் போனது?
அவர்களும் என்னைப் போன்று நிதியை எடுத்து வந்து அபிவிருத்தி செய்திருந்தால் இன்று எமது மாவட்டத்தின் நிலைமை வேறாக இருந்திருக்கும் என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.