பாராளுமன்ற தேர்தலில் பிரதேசவாதம் கக்கும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் என்பது நல்ல தலைவர்களையும் சேவை மனப்பாங்கு உள்ளவர்களையும் தெரிவு செய்யும் தேர்தலாகும். இத்தேர்தலில் பிரதேச வாதம் பார்த்து வாக்குகள் சிதறடிக்கப்படுமாக இருந்தால் நல்ல தலைவர்களை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை தோன்றும் இதனை நன்கு புரிந்து கொண்டு மக்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும் என திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பத்தாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று (30) மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்கால சூழ்நிலையில் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு பிரதேச வாதங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்தவர்களும் தமது பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற கோசம் விதைக்கப்பட்டுள்ளது.
பிரதேச வாதத்தினை விதைத்து கோசங்களை எழுப்புவதனால் நாம் நல்ல பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய முடியாமல் போய்விடும். அம்பாறை மாவட்டத்தினை பொறுத்த வரையில் இருபதிற்கு மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் மூன்று முஸ்லிம்கள் மாத்திரமே எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்களாக இருந்தால் எப்படி ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய முடியும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரதேச வாதம் விதைக்கும் அரசியல்வாதிகள் மக்களை நன்கு உணர்ச்சி வசப்படுத்துகிறார்களே தவிர நல்ல சிந்தனைகளை அவர்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை என்றே கூறவேண்டும்.
நாம் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் நல்ல அரசியல் கலாசாரமும், சிறந்த தலைவர்களும் உருவாக்கப்பட வேண்டும். முறையான கல்வித் திட்டம் இந்நாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். நல்ல கல்வித் திட்டம் இந்நாட்டில் கொண்டுவரப்படாவிட்டால் நமது இளம் சமூதாயத்தினரை நிம்மதியாக வாழ வைக்க முடியாத நிலை ஏற்படும். இந்நாட்டில் உள்ள மாணவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு உயர்கல்வியினையும், பட்டப் படிப்பினையும் வழங்குவதற்கு கல்விக் கொள்கைள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலைத்தேய நாடுகளைப் போல் ஆசிரியர்களுக்கு உயர்வான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கற்பிப்பார்கள்.
நமது அம்பாறை மாவட்டத்தினை பொறுத்த வரையில் விவசாயச் செய்கைக்கு பெயர் பெற்றதும், அதிக வருமானத்தினை பெற்றுத் தரும் துறையாக விவசாயமும், கடல் வளமும் காணப்படுகின்றன. இத்துறைகளின்பால் மேலும் நமது கவனத்தினைச் செலுத்தினால் அதிகளவான வருமானத்தினை முறையாகவும் தொடர்ச்சியாகவும் பெற்றுக் கொடுக்கக் கூடிய வழி முறைகளை ஏற்படுத்த முடியும்.
வருடத்தில் இரண்டு போகங்கள் செய்கை பண்ணும் விவசாயச் செய்கையினை மூன்று முறை மேற்கொள்வதற்கானதும், குறுகிய காலப் பகுதிக்குள் கூடிய விளைச்சலை பெற்றுத் தரும் நெல்லினங்கள் மற்றும் விவசாய முறைமைகள் போன்றன மாற்றியமைக்கப்பட வேண்டும். பெருமளவு விவசாயம் நிலம் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது. சிறந்த விவசாயிகள் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் எம்மால் உச்சப் பயனை இத்துறை மூலம் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.
நமது நாட்டினைச் சுற்றிவர பாரிய கடல் வளம் காணப்படுகின்றது. நாம் இன்னும் டின்மீன்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். பாரிய டின்மீன் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி அதில் தொழில்வாய்ப்புகளையும், அதிக வருமானம் ஈட்டும் துறையாகவும் கடல் வளத்தினை நாம் பயன்படுத்த வேண்டும். கடல்வளத்தினை வைத்து மேலைத்தேய நாட்டு மக்கள் எவ்வாறு தத்தமது நாடுகளை வளம் கொளிக்க வைத்துள்ளார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் விருத்தியடையச் செய்து மேலைத்தேய நாடுகளிடம் கையேந்தும் கலாசாரத்தினை முற்றுப் பெறச் செய்ய வேண்டுமாக இருந்தால் இளம் சமூதாயத்தினரின் வாழ்வில் ஒளியேற்றப்பட வேண்டும். அவர்கள் நாட்டம் கொண்ட நல்ல துறைகளுக்கு ஏற்ப கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள் மூலமாகவும், தொழிற்கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் நுட்பங்களைக் கற்பித்து பட்டங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு தொழில் துறைகளும் விஸ்தீரணம் அடையும். அப்போது அனைத்து துறைகள் மூலமும் பாரிய வருமானம் ஈட்டக் கூடிய நிலை எமது நாட்டில் தோற்றம் பெறும்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தெரிவு செய்யப்பட உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கடந்த கால செயற்பாடுகள், சமூகம் மீது அவர்களுக்குள்ள அக்கறை, அவர்களின் பொது நலச் சிந்தனை போன்றவற்றை ஆராய்ந்து தமக்கான பாராளுமன்ற உறுப்பினரை மக்கள் தெரிவு செய்ய தயாராக வேண்டும். நாம் கடந்த இருபது ஆண்டுகளாக அரசியலிலும், மக்கள் நலச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு பல்வேறான சேவைகளை இப்பிராந்திய மக்களுக்கு பள்ளிவாசல்கள் மூலமாகவும், சமூக பொது நல செயற்றிட்டங்கள் மூலமாகவும் செய்திருக்கின்றோம் அதனை மக்கள் நன்கு அறிவர்.

மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபைப் போல் நல்ல தலைவர்கள் நம்மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். அவர் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஓர் அடையாளத்தினை உருவாக்கித் தந்திருக்கின்றார். அவர் மரணிக்கும் போது 52 வயதைக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளே அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தார்.

இந்தக் குறுகிய காலப் பகுதியில் நமது மக்களுக்காக எத்தனையோ பல விடயங்களை செய்திருக்கின்றார். நமது பிராந்திய மக்கள் உயர்கல்வியினை பெற வேண்டும் என்று பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரி போன்றவற்றை நிறுவினார்.

துறைமுகத்தினை உருவாக்கி தொழில்வாய்பினை ஏற்படுத்தினார். நமது மக்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று நீண்டகால திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டார். இவ்வாறாக சிந்திக்க கூடியவர்களையும், சேவை செய்யக் கூடியவர்களையும், மக்கள் மீது பற்று வைத்து செயற்படக் கூடியதுமான தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். அரசியல் இலாபத்திற்காக காலத்திற்கு காலம் மக்களை உசுப்பேற்றி வாய்ச் சொல்லில் வீரம் காட்டுபவர்களை தெரிவு செய்ய முயற்சிக்க கூடாது. அவர்களுக்கு இத்தேர்தலில் நாம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

அம்பறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நல்லதொரு மாற்றம் இம்மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்றது. சிறந்ததும் சமூக அக்கறையுமுள்ள நல்ல தலைமை இக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது. மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சிக்கு இரண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

மக்கள் இத்தேர்தலில் ஒற்றுமைப் பட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சமூகத்தின் உரிமைகளையும் அபிவிருத்திகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என்றார்.