கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற முன்னால் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா தமிழ் அரச அதிகாரிகளிடம் மன்னிப்பு கோர வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சண்முகலிங்கம் சுரேஸ்குமார் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையிலே ஒரு சிஸ்டம் சேஞ்ச் எனும் கருப்பொருளில் மாற்றம் ஒன்று வேண்டும் என்று அரசியலிலே பெரும் மாற்றத்தை மக்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள், அந்த மாற்றத்தின் பாதையிலே தான் நானும் ஓட வேண்டும் என்று நினைக்கின்றேன். ஏன் என்று சொன்னால் பல பலம் பொருந்திய அரசியல்வாதிகள் இன்று அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்கள் விட்ட பிழைகள் மற்றும் தவறுகள் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றினால் மக்கள் அவர்களை தூக்கி எறிந்து இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இந்த முறை இடம்பெற இருக்கின்ற தேர்தலில் நிச்சயமாக முஸ்லிம் மக்கள் இனத் துவேசத்தை விதைக்கின்ற இனத்துவேசிகளை தூக்கி எறிவார்கள். நிச்சயமாக தூக்கி எறிய வேண்டும் அந்த பிரதேசங்களிலே புதிய முகத்துடன் இளம் அரசியல்வாதிகளையும் மண்ணை நேசிக்கின்றவர்களையே முஸ்லிம் மக்கள் அரசியலில் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஹிஸ்புல்லா போன்றவர்களை தூக்கி எறிந்து புது அரசியல் அனுபவத்தினை ஏற்படுத்தக்கூடிய இளைஞர்களை உள்வாங்கி சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதேபோன்றே நானும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
அரச ஊழியர்கள் என்பவர்கள் அரசு நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் கடமை ஆற்றுகின்ற ஒரு கட்டமைப்பினராக மட்டுமல்லாது கடந்த கொரோனா காலப்பகுதியிலே அவர்கள் தங்களுடைய உயிரை துர்ச்சமாக நினைத்து சுகாதாரத்துறை ஊழியர்களாக இருக்கட்டும் அல்லது இன்னோரென்ன அரசு சேவைகளை வழங்குகின்ற அரச ஊழியர்களாக இருக்கட்டும் அனைவரும் தங்களுடைய சேவையினை வழங்கியதனால்தான் கொரோனா என்ற ஒரு தீய நோயில் இருந்து எமது மக்களை காப்பாற்றக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு பட்ட அரசு அதிகாரிகளை தன்னுடைய அரசியல் இலாபத்திற்காகவும் தன்னுடைய அரசியல் இருப்புக்காகவும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் அமைச்சரும் கிழக்கில் மிக நீண்ட காலமாக அரசியல் செய்து வருகின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எமது மாவட்ட அரசு அதிகாரிகளை மிகவும் கீழ்த்தரமான முறையிலே சாடி இருக்கிறார். இதை சமூக வலைத்தளங்களில் எம்மால் அவதானிக்க முடிந்தது உண்மையிலேயே அரசியல் நிர்வாகம் என்பது சரியாக இடம் பெறாமல் இருந்தால் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த வங்குரோத்து நிலையிலிருந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது இருந்திருக்கும்.
அவ்வாறுபட்ட அரச அதிகாரிகளை அகௌரவபடுத்துவது என்பது உண்மையிலேயே மக்களுக்கு செய்கின்ற சேவையை அவர் ஒரு இனத்துவேச செயற்பாடாக கொண்டு செல்கின்ற செயற்பாடாகவே அவர் மேற்கொள்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் எல்லை நிர்ணய பிரச்சினை இருப்பதாக கூறி அதனூடாக பிரதேச செயலாளரை மிகவும் கீழ்த்தரமான முறையிலே சாடியிருந்தார். உண்மையிலேயே மட்டக்களப்பு மாநகர சபை என்பது அரச வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட ஒரு மாநகர சபை. அந்த எல்லை நிர்ணயத்தின் ஊடாகத்தான் அந்தப் பகுதிகளில் அரசு சேவையாளர்கள் தமது சேவையை வழங்கி வருகின்றனர். ஹிஸ்புல்லா அவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்து தனது உச்சக்கட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஓட்டமாவடி காளி கோயிலை உடைத்து மாட்டு இறைச்சி கடையை அங்கு கட்டினேன் என கடந்த காலங்களில் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல அவரது அதிகாரத்தை வைத்து நீதிமன்றத்தின் நீதிபதியை கூட மாற்றி தனக்கு எதிரான வழக்குகள் அனைத்திற்கும் தனக்கு சார்பாக தீர்ப்புகளை வழங்க செய்திருந்ததாகவும் கூறியுள்ளார். இவ்வாறாக மதிக்கப்பட வேண்டிய கௌரவ நீதிமன்றத்தையும் அவர் அவமானப்படுத்தியிருந்தார். இலங்கையில் அதிக உட்ச அதிகாரம் உள்ள இடம் தான் நீதிமன்றம் அந்த நீதிமன்றத்தின் நீதிபதியை கூட அவரது அரசியல் உச்ச அதிகாரத்தை கொண்டு மாற்றி உள்ளதாக கூறி இருக்கின்றார். இந்த இடத்தில் நீங்கள் யோசியுங்கள் இவரது அரசியல் வாழ்க்கை முழுவதுமே அரசு அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதே இவருடைய கடமையாக இருந்து வந்திருக்கின்றது. இவர் இவ்வாறான ஒரு செயற்பாட்டை மீண்டும் எதிர்காலத்தில் செய்யும் பட்சத்தில் இந்த கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வாறு சகோதரத்துடன் வாழ்வது. இவ்வாறான இனமுறுகலை ஏற்படுத்தும் இவரை போன்ற அரசியல்வாதிகளினால் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்தும் இனமுறுகல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம்.
எனவே இவ்வாறாக இன முறுகலை ஏற்படுத்தும் இவர் எமது மாவட்டத்தில் கடமையாற்றும் தமிழ் அரச அதிகாரிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.