சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகளை கிழக்கில் இருந்து துடைத்தெறிய வேண்டும்

தனித்துவ அரசியல் என்ற போர்வையில் சமூகத்தை ஏமாற்றும்
முஸ்லிம் கட்சிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக துடைத்தெறிவதற்கான சந்தர்ப்பமாக நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்டத்தில் சிலிண்டர் சின்னம் 03 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் வலியுறுத்தியுள்ளார்.

சாய்ந்தமருதில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ;

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் என்பதற்கப்பால் முறைமை மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற பாரிய எதிர்பார்ப்புடன் நாட்டு மக்களில் கணிசமான தொகையினர் அனுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

ஆனால் எதிர்பார்த்தளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசாங்கம் திணறுகிறது. அதனால் குறுகிய காலத்தில் அனுர அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க பெற்றுக் கொண்ட வாக்குகளை விட குறைவான ஆதரவையே இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சியால் பெற்றுக் கொள்ள முடியும். இதன்படி 100 ஆசனங்களுக்கு மேல் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

ஆகையினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியே நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
போன்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதான அதிருப்தியும் வெறுப்பும் காரணமாகவே எமது இளையோர், அனுரவின் தேசிய மக்கள் சக்தியினால் ஈர்க்கப்படுகின்றனர். பொதுவாக சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது அனுரவும் தேசிய மக்கள் சக்தியும் வெறும் மாயை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காலம் அதனை உணர்த்தும்.

தனித்துவ அரசியல் என்ற போர்வையில் காலா காலமாக சமூகத்தை ஏமாற்றி வருகின்ற
முஸ்லிம் கட்சிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக துடைத்தெறிவதற்கான சந்தர்ப்பமாக நாடாளுமன்றத் தேர்தலை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு மாற்றீடு தேசிய மக்கள் சக்தியல்ல என்பதை எமது இளையோர் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு, தேசிய ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன் சார்நத விடயங்கள், பிராந்திய அபிவிருத்தி என்று எல்லாவற்றுக்குமான ஒரே தெரிவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி காணப்படுகிறது. அதில் போட்டியிடுகின்ற எம்போன்ற திறமைசாலிகளை ஆதரித்து நாடாளுமன்றம் அனுப்புவதன் மூலமே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும்- என்றார்.

(செயிட் ஆஷிப்)