எமது மாவட்டத்தை முன்னேற்ற மாவட்டத்திலுள்ள 25ஆயிரம் மாணவர்களில் முதலீடு செய்திருக்கிறேன் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரியில் இடம்பெற்ற பிரசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
எதிர்காலத்தில் வேலைச்சந்தைக்குப் பொருத்தமான இளைஞர்-யுவதிகளை உருவாக்கும் நோக்கில் எனது சொந்த நிதியை முதலீடு செய்துள்ளேன்.
அதாவது யாழ் மாவட்டத்தின் எட்டு பிரதேசங்களில் என் கனவு யாழ் அக்கடமியை நிறுவி ஒவ்வொரு பிரதேசத்திலும் முதற்கட்டமாக 1200மாணவர்களை உள்வாங்கி இலவச தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறேன்.
இன்று பெருமளவான இளைஞர்கள் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு வேலை செய்ய முடியாமல் மீண்டும் நாடு திரும்புகின்றனர்.வெளிநாடுகளில் தேவைப்படும் கல்வித் தகைமை எமது இளைஞர் -யுவதிகளிடம் இல்லை அதுவே அவர்கள் மீண்டும் நாடு திரும்ப காரணமாக அமைகின்றது.
எனவே தான் நாம் தற்போது தொழில்நுட்ப கல்வியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.
25இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்கையை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கி வருகிறோம்.
அடுத்த பத்து வருடங்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து 25ஆயிரம் மாணவர்களை சர்வதேச வேலைச் சந்தைக்கு தகுதியானவர்களாக உருவாக்குவதே எனது இலக்காக உள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர்கள் புலம்பெயர வேண்டிய தேவை ஏற்படாது.சொந்த நாட்டில் இருந்து கொண்டே வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரிந்து டொலரில் சம்பாதிக்கக்கூடிய நிலை காணப்படும்.
இதனூடாக எமது மாவட்டம் வளர்ச்சி காண்பதுடன்-இளைஞர் -யுவதிகள் புலம்பெயர்வதும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
த.சுபேசன்