தேசியம் பேசும் கட்சிகளின் பேரினவாதக் கட்சிகளுக்கான ஆதரவு ஆபத்தானது -முன்னாள் பா.உ ஜனா

பேரினவாதக் கட்சிகளுக்கு தேசியம் பேசும் கட்சிகள் ஆதரவு வழங்குகின்றமையினாலேயே மக்கள் தமிழ்த் தேசியத்திலிருந்து ஒதுங்க முனைகின்றனர். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்குப் பாதகமாகவே அமையும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டஇ பாராளுமன்றத் தேர்தல் தலைமை வேட்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு நீலாவணை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கோ.கருணாகரம்,

தமிழ் மக்களின் அரசியல் எதிரிகள், ஒற்றுமைக்கு எதிரான சக்திகள் பெரும்பானன்மைக் கட்சிகளோ இன்று வடகிழக்கிலே அரசுடன் இணைந்து ஓர் அங்கமாகச் செயற்படும் கட்சிகளோ மாத்திரமல்ல. தேசியம் பேசும் கட்சிகள் சிலவும் இன்று தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் உண்மையான தமிழ்த் தேசியத்திற்கும் போலித்த தமிழ்த் தேசியத்திற்கும் இடையிலான போராகவே நான் பார்க்கின்றேன். அரசுடன் பங்காளிகளாகச் செயற்பட்டவர்களின் வாக்காளர்கள் அவர்களுக்கே வாக்களிப்பார்கள். ஆனால் தமிழ்த் தேசியத்திற்காக வாக்களிப்பவர்களுக்கிடையில் தான் மிகப்பெரிய போரொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை தனிப்பட்ட ரீதியிலும், கட்சி ரீதியிலும் மிகவும் மோசமாக விமர்சிப்பதே அவர்களின் ஏற்பாடு. ஆனால் நாங்கள் அதற்கு மாறானவர்கள்.

தமிழ் மக்கள் இன்று உண்மையான தமிழ்த் தேசியத்தை உணர்ந்திருக்கின்றார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே சஜித் பிறேமதாசாவின் போட்டோவையும், அவர் தொலைபேசி சின்னத்தையும் போட்டது மாத்திரம் அல்லாமல், தங்களின் புகைப்படம், தங்கள் கட்சியின் பெயர் என்பவற்றை இட்டு துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டார்கள். இவ்வாறான விரக்திகளின் காரணமாகவே தமிழ் மக்கள் தேசியத்தில் இருந்து இந்த முறை சற்று ஒதுங்கியுள்ளார்கள். இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்குப் பாதகமாகவே அமையும்.

தற்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்றாலே மற்றைய வேட்பாளர்களுக்கு ஒருவித பயம் பிடித்திருக்கின்றது. இது எங்களுடைய மாவட்டம் 75 வீதம் தமிழ் மக்கள் வாழும் மாவட்டம். நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு உரித்துடையவர்கள். இன்று நாங்கள் செல்லுகின்ற இடமெல்லாம் எங்கள் சங்குச் சின்னத்திற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அந்த நிலையில் எங்கள் பிரதிநிதித்துவம் பாதிப்படைந்துவிடக் கூடாது. எங்களுக்கு உரித்தான எங்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே நாங்கள் அனைவரும் ஒன்றாக சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைச் சங்குச் சின்னத்தின் ஊடாகக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது அறைகூவல்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அதிகரித்துவரும் ஆதரவினைச் சீர் குலைப்பதற்காக அவதூறான பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வெறுப்புணர்வினை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதும், இவ்வாறான பிரச்சாரங்கள் சங்குச்சின்னத்துக்கான ஆதரவினை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யுமே தவிர வேறொன்றுமில்லை என்பதனையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.