சர்வதேச போர் குற்ற பொறிமுறை இல்லை ! ஜெனீவா தீர்மானத்திற்கு அனுர அரசு எதிர்ப்பு !!

இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்திற்கும் அனுர அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச போர் குற்ற
ஆதாரங்களை சேகரிக்கும் பொறி முறையையும் ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ் இனம் சிங்கள தேசத்தால் மாபெரும் இனப்படுகொலையை சந்தித்து அதற்காக சர்வதேச ரீதியாக போராடிவருகிறது. அதுபற்றி எந்தவித கரிசனையுமற்று சிங்கள தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி சிங்களவர்கள் மட்டும் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்ந்தால் பொதுமென்று தமிழரை வைத்தே தம்மை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது தற்போதய அநுர அரசு.

உண்மையில் புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கியும் தற்போதய அநுர அரசின் செயற்பாடுகள் திசை திரும்பியுள்ளது.

அனுரவின் அரசியல் நிலைப்பாடு:

சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையோடு அதிகாரத்திற்கு வந்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள், குறிப்பாக அவரின் கடந்த கால அணுகுமுறைகள் தமிழ் மக்களுக்கு தெரிந்த வரலாறாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே வேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுனாமியில் ஜே.வி.பி இனவாதம் :

ஜே.வி.பியின் இனவாதத்தை தோலுரித்துக் காட்டிய நிகழ்வானது 2004இல் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது முழு உலகமும் அறிந்தது. அப்போது ஜே.வி.பி, சுனாமி நிவாரண கட்டமைப்புக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசியலில் இருந்து விலகிக் கொண்டது.

ஜே.வி.பி, ஜாதிக ஹெல உரிமைய போன்ற தீவிர இனவாத கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு ஸ்ரீலங்கா அரசியல் அமைப்புக்கு விரோதமானதென உயர் நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தனர். சிங்கள இனவாத சக்திகளுக்கு சார்பான முறையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சுனாமி கட்டமைப்பை முழுமையாக முடக்கி செயலிழக்கச் செய்தது.

ஆழிப்பேரலை சுனாமியால் அழிந்த தமிழர் தாயக புனர் நிர்மாண கட்டமைப்புக்கு சாவமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் ஜே.வி.பியின் சிங்கள பேரினவாதம் கொள்கையால் சாகடிக்கப்பட்டது.

சர்வதேசத்திற்கு பொய்முகம்:

எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என சர்வதேசத்திற்கு தனது பொய்முகத்தினை தற்போதய அரசும் காட்டியுள்ளது.

இலங்கை மனித உரிமை பேரவையுடனும்,வழமையான மனித உரிமை பொறி முறையுடனும், தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்த பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். அத்துடன் புதிய ஜனாதிபதி எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட பின்னர், தங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என வெளிவிவகார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை என்றும் மீண்டும் இழுத்தடிப்பை அரசு நீடித்துள்ளது.

தமிழர் மனித உரிமைக்கு பொறுப்புக் கூற கோரிக்கை!

தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காக 57வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்விற்கான OHCHR இன் இலங்கை பற்றிய அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) அவர்களின் 57வது மனித உரிமைகள் பேரவைக்கு (HRC) தயாரிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கை (A/HRC/57/19) தமிழ் மக்களின் உரிமைக்கான தீர்மானங்களுடன் வெளியாகி உள்ளது.

2022 அமர்வின் தீர்மானம் 51/1 ஆல் ஆகஸ்ட் 22, 2024 அன்று வெளியிடப்பட்டது. OSLAP இன் தற்போதைய பணியைத் தொடரவும் வலுப்படுத்தவும் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கு பொறுப்புக்கூறல் செயல்முறையை அவசரமாக நகர்த்தவும் HRC உறுப்பினர்கள் இந்த 57 வது அமர்வில் மற்றொரு இரண்டு ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

OHCHR கடந்த காலத்தில் செய்தது போல் இலங்கையில் உள்ள அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் கடமையுடன் ஈடுபட்டுள்ளது. இதில் இலங்கை அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) மற்றும் இலங்கை தீவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிவில் சமூகப் பங்குதாரர்களின் வரம்பில் அடங்கும்.

கடந்த ஜூன் 2024 இல் மேலதிக ஆலோசனைகளுக்காக OHCHR குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது, மேலும் 2023 பெப்ரவரியில் இலங்கை தனது நான்காவது சுழற்சியான உலகளாவிய கால மீளாய்வை (UPR) உட்படுத்தியது.

கடந்த 15 வருடங்கள் மேலாக இலங்கையுடனான OHCHR/HRC ஈடுபாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. ஆயினும் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களின் ஆணைகள் அல்லது இலங்கையால் நடைமுறைப்படுத்தப்பட்ட எந்த ஒரு பகுதிக்கும் இது சம்பந்தமாக எந்த பயனும் இல்லை என்பது அறிந்ததே.

ஐ.நா மனித உரிமை 57வது பேரவை தீர்மானம் :

முற்கூட்டிய அறிக்கை (Advance Report) முழுவதுமாக அதன் வலிமிகுந்த விவரங்கள் அமுல்படுத்தப்படாமையை ஆவணப்படுத்துகிறது. ஆனால் மனித உரிமை மீறல்களுக்கு உறுதியான தண்டனையின்மை மீது நடவடிக்கை எடுக்க இலங்கை வெளிப்படையாக வேண்டுமென்றே மறுப்பதையும் வெளிப்படுத்துகிறது.