இலங்கையில் இருந்து வருடம் தோறும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் தங்களது பிரயாண காலத்தில் விமான டிக்கெட்டுக்காக அதிக செலவு காரணமாக கஷ்டங்களுக்குள் உள்ளாகின்றனர் என பல ஐயப்ப பக்தர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மாவிடம் தெரிவித்திருந்த நிலையில் முன்னைநாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக காங்கேசன் துறைக்கும் காரைக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை நடைபெற்று வருகின்றது. அதே நேரம் போக்குவரத்துக்கான செலவுகளும் குறைவாக இருக்கின்றது.
அதேவேளை இந்த வசதி வாய்ப்பினை கொழும்புவாழ் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்ல சகல ஐயப்ப பக்தர்களுக்கும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குறித்த கப்பல் சேவையினை டக்ளஸ் தேவானந்தா மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் பாபு சர்மாவிடம் ஐயப்ப பக்தர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் முன்னால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி கேரளாவில் துணை தூதரகம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமாக இருந்தால் நிச்சயம் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக செயற்படுத்தி தர முடியும் என ஐயப்ப பக்தர்களுக்கு பாபு சர்மா உறுதிமொழி வழங்கினார்.