மக்களுடைய அடிமட்ட பிரச்சனைகளை நன்றாக அறிந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் தி.தங்கவேலு தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றிருந்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பாராளுமன்ற உறுப்பினர்களாக உங்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களை உங்கள் கிராமத்தில் அல்லது பிரதேசத்தில் இருக்கும் ஒருவரை அனுப்புங்கள்.
கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரு தரப்பினர் நீதிமன்றில் இருந்த நீதியரசரை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தனர்.அவர்கள் தம் மீது நம்பிக்கை இல்லாததால் தான் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்தனர்.
ஆனால் முதலமைச்தராக வந்தவருக்கு மக்களின் அடிமட்ட பிரச்சனை தெரியாது.கொழும்பில் நீதிபதியாக இருந்தவருக்கு வடக்கு மக்களின் பிரச்சனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மக்கள் இனிமேலும் அவ்வாறான தவறுகளை விடக்கூடாது.கிராம மட்டத்தில் இருந்து மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்த ஒருவருக்கு வாக்களித்து அவரை பாராளுமன்றம் அனுப்பி உங்களுடைய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
இன்று பலரும் தம் மீது நம்பிக்கை இன்றி வேறு பொதுக் கட்டமைப்புக்களுடைய சின்னங்களை வலிந்து எடுத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தலைமையிலான எமது ஜனநாயக தேசிய கூட்டணி இம்முறை முதன்முறையாக தபால்பெட்டி சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறது.
நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எம்மை வெற்றி பெற வைக்கும் என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
த.சுபேசன்