மன்னார் நுழைவாயிலில் அமைக்கப்படும் நகர கடற்கரை பூங்கா

மன்னார் நுழைவாயிலில் அமையப் பெறும் இயற்கை பூங்கா மன்னார் மாவட்டம் வரும் உல்லாசப் பயணிகளை கவரும் ஒரு இடமாக அமையும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் நுழைவாயிலில் அமைக்கப்படும் நகர கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வு திங்கள் கிழமை (21) நிகழ்வு பெற்றபொழுது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவிக்கையில்

நீண்டகாலமாக மன்னார் மாவட்டத்தின் மக்களின் ஒரு முக்கிய தேவைப்பாடாக இருந்த இயற்கை பூங்கா இன்றையத் தினம் (22) மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தை மன்னார் நகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றையத் தினமே (21) இயற்கை பூங்கா அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் மன்னார் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு இன்று நனவாகியதை நான் பார்க்கின்றேன். மன்னார் மாவட்டத்தை உல்லாசப் பயணிகளின் ஒரு கேந்திர இடமாக மாற்றுவதற்கு இந்த பூங்கா ஒரு முக்கிய இடத்தை வகிக்கும்.

இங்கு அமைக்கப்பட இருக்கும் பூங்கா மன்னார் நகர சபை மற்றும் உல்லாசபயணத்துறை திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அமையப்பெற இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் பலவிதமான உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய ஒரு தகவல் மையம். மக்கள் காலை மாலை நேரங்களில் தங்கள் உடற்பயிற்சி செய்யக்கூடியதாகவும் , பொழுது போக்காக வந்து இங்கு அமரக்கூடியதாகவும் , விளையாட்டு உபகரணங்கள் கொண்ட வசதிகள் மற்றும் அருகில் படகில் பயணிக்கக்கூடிய வசதிகள் இவ்வாறு பலதரப்பட்ட வசதிகள் கொண்ட ஒரு இடமாக இது அமையப்பெற இருக்கின்றது.

இந்த இயற்கை பூங்காவுக்கான கட்டமைப்புக்களை நகர அபிவிருத்தி சபையினர் முன்னெடுக்க உள்ளனர். இந்த வேலைத் திட்டங்கள் யாவும் நகர அபிவிருத்தி சபையின் திட்டமிடலிலேயே இது நடைபெற இருக்கின்றது.

ஆகவே மன்னார் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவை நனவாக்க ஒத்துழைத்த யாவருக்கும் நான் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)