ஹரீஸ் என்ன சொல்ல போகிறார் மேடையில் ஹரீஸ் சொன்னது இதுதான்

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இப்போது குடிகொண்டுள்ள மேட்டுக்குடி, பிரபுத்துவ அரசியலை இல்லாமல் செய்ய வேண்டும். எமது தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பழைய அரசியல் கலாசாரத்தை துடைத்து எறிந்தார். அதேபோன்று இப்போது கட்சியில் உள்ள மேட்டுக்குடி அரசியலையும், சொகுசு வாழ்க்கையையும் துடைத்தெறிய வேண்டும் என்று சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

மாளிகைக்காடு சந்தியில் ஆரம்பித்து மாளிகா வீதி, கடற்கரை வீதி ஊடாக சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் வரை இளைஞர்கள், பொதுமக்கள் புடைசூழ முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு “வஞ்சிக்கப்பட்டவனின் குரல்” மேடையில் வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றினார். அங்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் மேலும் தெரிவித்ததாவது

என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இக்கூட்டத்தை நடத்தவில்லை. தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்து தேசிய பட்டியலில் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்பதற்காக இக்கூட்டத்தை நடத்தவில்லை. எனக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும், அந்த அநியாயத்திற்கு மக்கள் விளக்கம் கேட்டதற்கும் அமையவே இக்கூட்டத்தை நடத்துகிறேன்.

கட்சியில் தலைவர் எனக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். என்னோடு அதுபற்றிப் பேசி விட்டுத்தான் அதை அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தலைவரை புனாணையில் சந்தித்ததன் பின்னர் மீண்டும் ஒருதடவை நான் சந்திக்கவில்லை. நான் தேசியப் பட்டியலுக்காகவோ அமைச்சர் பதவிக்காகவோ அரசியல் செய்பவனல்லன். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் என்னைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைத்தீர்கள். அது தொடர்பில் 7 உலமாக்கள் உங்களோடு பேசினார்கள். ரணிலுடன் பெற்றுக் கொண்ட நிதியை இடைநிறுத்தினால் நிதியை பெற்றுக் கொண்ட பாடசாலைகளும் பள்ளிவாசல்களும் விளையாட்டுக் கழகங்களும்தான் பாதிக்கப்படும். அதனால் ஹரிஸின் மீதான தடையை நீக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டு என்றும் கேட்டார்கள். அதனை ஏற்றுக் கொண்டீர்கள். இந்த வாக்குறுதி புனாணையில் வைத்து மீறப்பட்டது.

பின்னர் கட்சியின் செயலாளர் நான் சஜித் பிரேமதாஸவுக்கு வேலை செய்யவில்லை. அதனால்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று சொன்னார். சஜித்தின் தேர்தல் பரப்புரைக்காகக் கல்முனை, மருதமுனை போன்ற பல இடங்களில் நான் கூட்டம் நடத்தினேன். அந்தக் கூட்டங்களை பூதங்களா நடத்தியது என்று கேட்கின்றேன். நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் வகுத்த வியூகத்தைஉங்களால் வெல்ல முடியவில்லை. சஜித் றிசாட் பதியூதீன் சொல்வதைத்தான் கேட்கிறார். ரவூப் ஹக்கீமின் சொல்லைக் கேட்பதில்லை. நான் மட்டக்களப்பில் மரத்தில் தேர்தல் கேட்டால் தோற்றுவிடுவேன். டெலிபோனில் கேட்டால்தான் வெற்றி பெறுவேன். இதைத்தலைவரிடம் சொல்லுங்கள் என்று ஹிஸ்புல்லாஹ் அழுதார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் மரத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது நான் சொன்னேன். சில வேட்பாளர்களுக்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருக்கிறது. அதனால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது விரும்பு வாக்குகளை எடுப்பவருக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பை வழங்குங்கள் என்றேன். அப்போது தவம். அப்படியாக இருந்தால் தலைவர் அம்பாறையில் தேர்தல் கேட்க வேண்டும் என்றார்.

இதன் பின்னர் சிலரின் அழுத்தங்கள் காரணமாகத்தான் ஹரிஸிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று தலைவர் சொல்லுகிறார். அப்படியாக இருந்தால் உங்களின் எடுபிடியாகவுள்ள உதுமாலெப்பையும் எதற்காக எனக்கு டிக்கட் கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிறார் என்று கேட்டேன். அதனால் இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாகவே நான் சந்தேகிக்க வேண்டியேற்படும் என்றேன். சிஸ்டம் மாற்றப்பட வேண்டுமென்று மக்கள் அநுரவோடு அலையாக இருக்கின்ற போது நீங்கள் இன்னும் 5 வருடங்களுக்கு எதிர்க்கட்சியில் தான் இருக்கப் போகின்றீர்கள். நீங்கள் ஜே.வி.பி. ஆட்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றீர்கள். ஜனாதிபதி அனுரவோடு முரண்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களை மக்கள் தூரமாக்கி விடுவார்கள். இக்கட்சியை அழித்து விடாதீர்கள் என்றேன். இறுதியில் எனக்கு டிக்கட் இல்லையென்றே சொன்னார்.

இதை அறிந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் என்னோடு பேசினார். தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறினார். தேசியப் பட்டியல் பற்றியும் சொன்னார். நான் அதற்குச் செவிசாய்க்கவில்லை. நான் நினைத்திருந்தால் ஒப்பமிட்டு ரணிலோடு இணைந்து போட்டியிட்டிருக்க முடியும். நமது அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் அரசியல் கட்சி என்ற நிலையை மாற்ற வேண்டும். அந்த மாற்றத்தை ஒருவர் கொண்டு வரவேண்டும். ஜே.வி.பி காரர்கள் எவ்வளவு தியாகத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள். 3 நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டவர்கள். இன்று ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளனர்.

ஆகவே, நமது கட்சியில் இருந்தும் மேட்டுக்குடி பிரபுத்துவ அரசியலை இல்லாமல் செய்யவேண்டும். ஜே.வி.பியில் ஜனாதிபதி அனுர தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. தலைவர் அஸ்ரப் பழைய அரசியல் கலாசாரத்தை துடைத்து எறிந்தார். அதேபோன்று இப்போது கட்சியில் உள்ள மேட்டுக்குடி அரசியலையும், சொகுசு வாழ்க்கையையும், தங்களின் பிள்ளைகளுக்கு சிங்கப்பூரிலும், கொழும்பில் பல இடங்களிலும் வீடுகளை வாங்கி வைத்துள்ள அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டுமென்றால் யாரோ ஒருவர் தன்னை தியாகம் செய்தாக வேண்டும்.

ரவூப்ஹக்கீம் புனாணையில் வைத்துச் சொன்னார். கடந்த ஒன்றரை வருடமாக உங்களின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த நடவடிக்கைகள் எனக்குபிடிக்கவில்லை. அதனால் உங்களுக்கு டிக்கட் தர முடியாது என்று. எதற்காக என்னுடைய நடவடிக்கைகள் பிடிக்கவில்லை? அவர் 6 ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதில் 5 தேர்தல்களில் தோல்வியடைந்தோம். இந்த வேளைகளில் நான் சில வியூகங்களைச் சொல்லியுள்ளேன். அதனால் அவருக்கு என்னுடைய நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸில் யார் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தாலும் நீங்கள் அமரப்போவது எதிர்க்கட்சியில், நாடாளுமன்றத்தில்
ஹரிஸிற்கு ரணில் இருந்ததைப் போன்று. ஜனாதிபதி அனுரகுமார உங்களுக்காக இருக்கப்போவதில்லை. அவரைக் கேவலப்படுத்தியற்காக 200 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். எங்களின் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களைக் கோபப்படுத்துகின்ற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரல்ல 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் முஸ்லிம்களையும், கல்முனை நகரத்தையும் காப்பாற்ற முடியாது. இவர்களின் திட்டம் ஒன்றேதான். அதாவது கல்முனைத்தொகுதியில் ஹரிஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக் கூடாதென்பதாகும் என்றார்

மேலும், கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் 10 பேர் இருந்த நிலையில் அதாஉல்லா விடம் பேசி சாய்ந்தமருது உறுப்பினர்களின் ஆதரவு பெற்று ரஹ்மத் மன்சூரை பிரதி மேயராக்கி அழகு பார்த்தேன். அவர் நயவஞ்சகத்துடன் செயல்படும் அக்கரைப்பற்று தவத்துடன் கூட்டுச் சேர்ந்தது செயல்படுவதுதான் மகா பிழை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து ”மந்திரித்துமா நீங்கள் எங்களோடு வாருங்கள் உங்களை தேசிய பட்டியலில் அல்லது வேட்பாளர் பட்டியலில் போடுகிறோம் ” எனக் கூறி அழைப்பு விடுத்தார் . அவரின் அழைப்பை நான் ஏற்றிருந்தால் இந்த மக்களின் ஆதரவுடன் நான் நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இருந்தும் நான் அதற்கு ஆசைப்பட வில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் பிரபுத்துவ மேட்டுக்குடி தன்மையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? யாரோ ஒருவன் தட்டிக் கேட்க வேண்டாமா? இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹரீஸ் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 20ம் திருத்தத்தை ஆதரித்தமை, ஜனாஸா எரிப்பை நிறுத்த செய்த முயற்சிகள் பற்றி மனம் திறந்து பேசினார். இம்முறை இடம்பெறும் பொதுத் தேர்தலில் தனக்கு ரவூப் ஹக்கீம் அவர்களினால் செய்த கழுத்தறுப்புக்கள், சிராஸ் மீராசாஹிப், தவம், ரஹ்மத் மன்சூர், உதுமாலெப்பை போன்றோர்கள் செய்த துரோகம், கட்சி செயலாளர் நிஸாம் காரியப்பரின் இரட்டை நாடகங்கள், குழிபறிப்புக்கள் தொடர்பிலும் உரையாற்றிய அவர் கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் தனது பங்களிப்பை மக்களுக்கு எத்திவைத்தார்.

இந்த “வஞ்சிக்கப்பட்டவனின் குரல்” மேடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தல் வேட்பாளராக இருக்கும் ஏ.ஆர். அமீர் கலந்து கொண்டு ஹரீஸ் அவர்களுக்கு சார்பாகவும், அவருக்கு நடந்த அநீதிக்கு எதிராகவும் உரையாற்றினார். இங்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் ஏ.எம். றக்கீப், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. வஸீர், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெமீல் காரியப்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

ரவூப் ஹக்கீமை தலைவர் என்று அழைக்கக்கூடாது, நிஸாம் காரியப்பர் சமூக துரோகி, துரோகிகள் நால்வருக்கும் பாடம் புகட்டுவோம் என்ற கோஷத்தை மக்கள் எழுப்பியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR