சலுகைகளுக்காக கண்டி மக்கள் ஆணையை பணயம் வைத்து சிலர் வியாபாரம் நடத்தினர்

கண்டி மாவட்டத்துக்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம். அதற்காக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளவர்களை, மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றில்லை. எம்மைபோன்ற இளைஞர்களை, மக்கள் பக்கம் நிற்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பும் முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பாரத் அருள்சாமியின் கண்டி மாவட்ட தேர்தல் காரியாலய திறப்பு விழா கண்டி நகரில் இன்று (18.10.2024) அன்று இடம்பெற்றது. அதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நீண்டகாலமாக கண்டியில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது.

அதனை வென்றெடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 2010 ஆம் ஆண்டு விதை விதைத்தார். அந்த விதைமூலம் ஏற்பட்ட விளைச்சலைதான் சிலர் 2015 ஆம் ஆண்டு அறுவடை செய்தனர்.

எனினும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடக்கவில்லை.

மாறாக ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டனர். சலுகைகளுக்காக மக்கள் ஆணையை பணயம் வைத்து சிலர் வியாபாரம் நடத்தினர். இதனால் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, மனோ கணேசனின் வழிகாட்டலுடன் கண்டியில் களமிறங்கியுள்ள எனக்கு தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள். முஸ்லிம் சொந்தங்களும் சமூக நன்மைக்காக ஒரு வாக்கை பயன்படுத்துவார்கள்.

அந்தவகையில் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இம்முறை நிச்சயம் பாதுகாக்கப்படும். ஆனால் புதிய இளைஞனை, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய என்னை மக்கள் அதிஉயர் சபைக்கு, அமோக ஆதரவுடன் அனுப்பி வைப்பார்கள்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)