எமது நாட்டில் சுமார் முப்பதாயிரம் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியின்றி வீதிகளில் நடமாடுவதாக ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதையடுத்து கட்டாயக்கல்வி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டம் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்ஒரு கட்டமாக முறைசாரா கல்வி நிகழ்ச்சித்திட்டத்தினூக கட்டாயக் கல்வி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பாடசாலை மட்ட குழுக்களை வலுப்படுத்தும் நோக்குடன் அதிபர்களுக்கான வாண்மையினை விருத்தி செய்ய கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 79 பாடசாலைகளின் அதிபர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு நடைபெற்றது.
ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலய மண்டபத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் செயட் அஹமட் தலைமையில் நடைபெற்ற இச்செயவமர்வில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் முறைசாரா மற்றும் விசேட கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ் ஜனார்த்தன், ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் எம். தயானந்தன் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்பிஎம். சித்தீக் ஆகியோரும் விளக்கவுரை யாற்றினர்.
நலிவடைந்த குடும்ப பொருளாதாரம், உடலியல் குறைபாடு, கட்புல மற்றும் செவிப்புல குறைபாடுகள், நீண்டகால நோய், மீத்திறன் குறைபாடு மற்றும் பெற்றாரின் இழப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை கைவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை சமூகம், கல்வித்திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள குழுக்களை வலுப்படுத்தி கட்டாயக் கல்வி முறையினை உரிய முறையில் அமுல்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(ஏறாவூர் நிருபர் நாஸர்)