எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்.
அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
நான் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்ற வகையில் எங்கள் தமிழீழ இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.
இப்பொழுது பொதுவாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டில் முன்னைய ஜனாதிபதி ரணில் அவர்களால் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான சாலை வழங்கப்பட்டு வந்தன.
இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மதுபான சாலை பேர்மிட் பெற்றுள்ளனர் என்ற சந்தேக கண்கள் கொண்டு பார்க்கும் நிலை இருந்து வருகின்றது.
தமிழீழ இயக்கத்தில் இருக்கின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த மதுபான சாலை பேர்மிட் எடுக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து நிற்கின்றேன்.
மக்களுக்கு அநீதி விளைவிக்கும் எந்த செயல்பாட்டிலும் எமது இயக்கம் செயல்படாது என்பதை தெரிவித்து நிற்கின்றேன்.
என்னை பொறுத்த மட்டில் அரசியல் வாழ்க்கையில் தேசியத்தோடு பயணிக்கின்ற செயல்பாடாகவே நான் இருந்து வருகின்றேன்.
மதுபான சாலை பேர்மிட் வழங்கும் வேளையில் நாங்கள் இதை பெறுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த ஈனச் செயலிலும் நாங்கள் இறங்க மாட்டோம்.
எனக்கு வவுனியாவில் மதுபான சாலை இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். இது உண்மைக்கு மாறான விடயம். இது நிறுபிக்கப்படுமாகில் நான் தேர்தலில் போட்டியிடும் நிலையிலிருந்து விலகி விடுவேன்.
இந்த ஊழல் சம்பந்தமான விடயத்தில் எமது தமிழீழ இயக்கத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசியத்தை நேசித்து செயல்பட்டவர்கள்.
ஆயுதம் ஏந்தி போராடியவாகள் என்ற வகையில் நாங்கள் ஈனச் செயல்களை செய்யவில்லை செய்ய மாட்டோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
(வாஸ் கூஞ்ஞ)