கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடம் மற்றும் நிலாவெளி மாவட்ட சித்த ஆயுள்வேத வைத்தியசாலை, கப்பல்துறை சித்த ஆயுள்வேத தள வைத்தியசாலை இணைத்து நடாத்திய மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் அகஸ்தியர் ஸ்தாபணமாகிய மூதூர் கங்குவேலி திருக்கரைசை மாநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்று (04) இடம்பெற்றது.
கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபன தலைவர் தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த இலவச சித்த மருத்துவ முகாமுக்கு இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண இணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண துணை தூதுவர் நடராஜா ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக முதல்வர் திருமதி சந்திரவதனி தேவதாசன், திருமலை வளாக சித்த மருத்துவ பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் வ.அனவரதன், நிலாவெளி மாவட்ட சித்த ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன், வைத்திய கலாநிதி செ.போல்ரன் றஜீவ் உள்ளிட்ட வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், பயிற்சி வைத்தியர்கள், சித்த மருத்துவ பீட மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்த மருத்துவ முகாம் காலை 9.30 மணியிருந்து மதியம் 2.00 மணிவரை வரை இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து, உடல் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, உடற்பருமன் அளவு போன்ற பல பரிசோதனைகளை மேற்கொண்டு சித்த மருத்துவ ஆலோசனைகளுடன் மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்.
குறிப்பாக, தொற்றாநோய் குறித்து பொதுமக்களுக்கு தகவலளிக்கும் வகையில் அது தொடர்பான விழிப்புணர்வு காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண இணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண துணை தூதுவர் நடராஜா உள்ளிட்ட குழுவினர் திருக்கரைசையம்பதி கங்குவேலி அகஸ்தியர் ஸ்பான சிவன் ஆலயத்தை வழிபட்டதன் பின்னர், சித்த மருத்துவ தந்தையான அகஸ்திய மா முனிவர் வாழ்ந்து வந்த இடங்களையும், அவரால் நிறுவப்பட்டதும் உலகிலேயே முதலாவதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகமாக இருக்கின்ற இடத்தையும் பார்வையிட்டனர்.
அபு அலா