பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து மாணவன் பலி

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

04.10.2024 அன்று பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றில் சுவரில் மோதியுள்ளது. இதனால் அவரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)