தமிழ் அரசியல் கட் சிகள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பு நலன் பற்றிய சிந்தனை இன்றி ஏதாவது தனிவழி தீர்மானங்களை எடுப்பார்களாக இருந்தால், நிச்சயமாக கல்முனைத்தொகுதி மக்கள் மாத்திரமல்லாமல் இந்த மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை இந்த தேர்தல் களத்தில் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றோம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கல்முனை சேனைக்குடியிருப்பு தமிழ்வாணன் மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலான மக்கள் சந்திப்பு கடந்த 01 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பு தொடர்பாக பொதுவான ஒரு அழைப்பு அறிவித்தல் ஏலவே விடுக்கப்பட்டது .அந்த அழைப்பு அறிவித்தலில் கல்முனை பிராந்தியத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள் மற்றும் விசேடமாக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்டு காணப்படுகின்ற பொது அமைப்புகள், ஆலய நிருவாகங்கள், இளைஞர் கழக நிருவாகங்கள், விளையாட்டுக் கழக நிருவாகங்கள், கிராம அபிவிருந்து சங்கங்க நிருவாகங்கள், மற்றும் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பொதுமக்கள் தமது கருத்துக்கள் கோரிக்கைகளையும் முன்வைத்து பேசி இருந்ததோடு அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்கள் கட்சி நிலைபாடுகள் பற்றி பேசி இருந்தனர்.
பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் தரப்பிலே தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக முன்வைக்கப்பட்டது.
இருந்தாலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடைய பதில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் திருப்திப்படுகின்ற வகையில் அமைந்திருக்கவில்லை
. அதாவது ஒன்றுபட்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் அற்ற கருத்துக்களை தான் அவர்கள் பெரும்பாலும் வெளியிட்டிருந்தார்கள்.
அதனால் அவர்களுக்கு இன்று 03.01.2024 ம் திகதி வரை கால அவகாசம் பொதுமக்களால் வழங்கப்பட்டது.
அதேவேளை ஒன்றுபட்டு ஒரு சின்னத்தில் போட்டியிட முன் வராத பட்சத்தில் கல்முனைத் தொகுதி பொதுமக்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் சென்று தேர்தலுக்கான ஆதரவை தனிவழி யில் வழங்குவது என்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதோடு இந்த முடிவு பொத்துவில் தொகுதி, சம்மாந்துறை தொகுதி போன்ற தொகுதிகளுக்கும் சென்று அந்த தொகுதி மக்களோடும் பேசி மாவட்ட ரீதியான முடிவு ஒன்று இறுதியாக எடுக்கப்படும் என்றும் ஒரு நிலைப்பாட்டை ஊடகங்களுக்கும், அம்பாரை மாவட்ட மக்களுக்கும்,அறியத் தருகிறோம் என்று ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்