(சுமன்)
வடகிழக்கு முன்னேற்றக் கழகம் சார்பில் சுயேட்சைக்குழுவுக்காக இன்றைய தினம் கட்டுப் பணம் செலுத்தியது…
வடகிழக்கு முன்னேற்றக் கழகம் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்டையாகக் களமிறங்கும் முகமாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் ஆணையகத்தில் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.
வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் லவக்குமார் தலைமையில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன் போது வி.லவக்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசியற் பயணங்களின் மூலம் எமது மக்களுக்கு ஏமாற்றமே மீதமாகக் கிடைத்துள்ளது. தற்போது தெற்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தை வைத்து எமது தமிழ் இளைஞர்களும் இன்று தேசிய மக்கள் சக்தி எனும் மக்கள் விடுதலை முன்னணி மாயையில் இருக்கின்றார்கள். இந்த மக்கள் விடுதலை முன்னணிதான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை பிரித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை பங்கம் செய்தவர்கள் என்பதை எமது இளைஞர் யுவதிகள் மறந்து விடக் கூடாது.
அது மட்டுமல்லாது கடந்த காலத்திலே அபிவிருத்தி என்றும் கிழக்கு மீட்பு என்றும் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எமது கல்வி நிலைமைகளில் கூட அபிவிருத்தியைத் தோற்றுவிக்கவில்லை மாறாக பாடசாலைகளை மூடிய வரலாறுகளே உள்ளன்.
இந்த நிலைமைகளில் ஒரு மாற்றம் வேண்டும். இவ்வாறான மாற்றத்தை நோக்கிய பயணமாகவே எமது இந்த சுயேட்சையான களமிறக்கம்.
எமது மக்கள் எம்மைப் பற்றி அறிவார்கள், எமது மக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் எமது பிரச்சன்னம் இருக்காமல் இருக்காது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசுக்கு எதிராகப் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை முன்னெடுத்திருக்கின்றோம்.
நாங்கள் இதுவரை காலமும் எந்தவிதமான அரசியற் பின்னணியும் இன்றி எமது மக்களுடன் இணைந்து சமூகம்சார்ந்த விடயங்கள், சிறு சிறு அபிவிருத்தி விடயங்களை முன்னெடுத்திருந்தோம்.
கிழக்கை மீட்கப் போகின்றோம் எம்று மார்பு தட்டி வந்தவர்கள். தற்போது புதிய அரசாங்கள் உருவான பிற்பாடு அவர்களையே காண முடியாத ஒரு சூழல் கிழக்கிலே ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை அவர்களுக்கு ஏற்பட முக்கிய காரணம் ஊழல்.
நாங்கள் தற்போது களத்தில் நிற்பது எமக்கான அல்ல எமது மக்களுக்காக. எமது மக்களின் இருப்பைப் பாதுகாப்பதற்காக.
தேசியத் தலைவரால் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கா உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சின்னாபின்னமாகியிருக்கின்றது.
எமது தமிழ் மக்களுக்காகவும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஒரு மாற்றத்தை நோக்கிய பயணத்திற்காக இன்றைய தினம் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருக்கின்றோம். தமிழ் மக்கள் எங்களுக்கான ஆணையைத் தரும் பட்சத்தில் எமது மக்களில் ஒருவராகவே நாங்கள் இருந்து உங்களோடு பயணிப்போம் என்று தெரிவித்தார்.