ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்புரிமையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி ஊடாக வென்றெடுப்பது தொடர்பாக கலந்துரையாடல் திங்கட்கிழமை (30) இரவு புத்தளம் போல்ஸ் வீதி ஐஸ்டொக் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாக ஏற்பாட்டு குழு சார்பாக சமூகவியலாளர் இப்லால் அமீன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் தொடர்பாக இப்லால் அமீன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், போராளிகள் மேற்கொண்ட தீர்மானங்களுக்கு அமைவாக
புத்தளத்துக்கான ஆளுங்கட்சி எம்.பி. யை வெற்றிக்கொள்ளவும், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அரசியல் தலைமைகளுடன் மிக விரைவில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுக்கவும் ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்லால் அமீன் மேலும் தெரிவித்தார்.

இன ரீதியாக, மத ரீதியாக இனிமேலும் பிரிந்து நின்று புத்தளம் தொகுதியை இதன் பின்னரும் அரசியல் அனாதை அந்தஸ்தத்தில் தொடரவிடாது, புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றிக்கொள்ள சமூக, மார்க்க தலைமைகள் ஓரணியாக அனைத்திரள வேண்டும்.

இதை விடுத்து மக்கள் நிராகரித்த சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளை, மக்களுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு துணைப்போக கூடாது.

தகுதி வாய்ந்த, தகமையுடைய, சமூக அக்கறையும், நாட்டின் அபிவிருத்திக்கு பலம் சேர்க்ககூடிய மேலுமொரு வேட்பாளரை NPP கட்சி ஊடாக களமிறக்கி தொகுதியின் வெற்றிக்கும் நமக்கான பாராளுமன்ற உறுப்புரிமையை வெல்வதற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குதல்.

சிறுபான்மை கட்சிகளால் பிரித்தாளப்படும் சமூகத்தை விழிப்பூட்டி தேசிய ரீதியான அரசியல் கலாச்சார மாற்றத்துக்கு சிதறடிக்கப்படும் வாக்குகளை ஒன்று சேர்த்து வெல்லப்போகும் ஆளும் NPP அணிக்கு பலம் சேர்த்தல்.

எதுவித சுய லாபங்களையும் தனிமனித அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் தாண்டி விட்டுக்கொடுப்புடன் பணியாற்றி அரசாங்கத்தின் ஆளும் அதிகாரம் ஊடாக தொகுதி மக்கள் ஏங்கி தவிக்கும் உரிமைகளை, அபிவிருத்திகளை, சமூக பாதுகாப்பை, அபிலாஷைகளை NPP கட்சியுடன் இணைந்து வெற்றிக்கொள்வதற்கு இணையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.