(அபு அலா) திருகோணமலை மாவட்டத் தொகுதியில் இதுவரை காலமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் இரு வேட்பாளர்கள் மாத்திரமே நிறுத்தப்பட்டு தேர்தல் கேட்டும் வருகின்றனர். இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் புல்மோட்டை பிரதேசத்திலிருந்து மிகப் பொருத்தமான ஒருவரை களமிறக்க வேண்டும் என்று அக்கட்சியின் புல்மோட்டை மத்திய குழுவினர் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புல்மோட்டை மத்திய குழுக் கூட்டம் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.முபாறக் தலைமையில் (29) இடம்பெற்றது. இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்ட தொகுதி சார்பாக, கிண்ணியாவிலிருந்த ஒரு வேட்பாளரும் மூதூரிலிருந்து ஒரு வேட்பாளரும் நிறுத்தச் செய்த அக்கட்சி, இம்முறை அவ்வாறில்லாமல் மூன்று வேட்பாளர்களை உள்ளடங்கச் செய்ய வேண்டும். அதில் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வைத்திருக்கும் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட எமது பிரதேசத்தில் மிகப் பொருத்தமான கட்சியின் கொள்கைக்கும், அதன் தலைமைக்கும் கட்டுப்பட்டு மக்களின் தேவைகளை தாமதியாது நிறைவேற்றி நடக்கக்கூடிய ஒருவரை எதிர்வரும் பொதுத்தேர்தலில் நிறுத்தவேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடமும் முன்வைக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இத்தேர்தல் களத்தில் புல்மோட்டை சார்பில் ஒருவரை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எங்களுக்குத் தாருங்கள் என்ற விடயம் தொடர்பிலும் எமது பிரதேசத்திற்குரிய அரசியல் உரிமை மற்றும் எதிர்கால அரசியல் சம்பந்தமான உறுமொழியை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். என்ற தீர்மானத்தின் பிரகாரம் நாம் செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.