தமிழ்த் தேசியப் பற்றுள்ள இளைஞர்கள்முன் வருவார்கள் எனின் ஆலோசகராக தயார்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு இடங்கொடுங்கள் பழையவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று வெறுமனே சமூக வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் எழுதுவதில் எந்தப் பயனம் இல்லை. திறமையானவர்கள் தமிழ்த் தேசியப் பற்றுள்ளவர்கள் முன்வாருங்கள், நாங்கள் ஆலோசகர்களாக உங்களை வழிநடத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். அதைவிடுத்து தேசியக் கட்சிகளின் மாய அலைக்குப் பின்னால் செல்வீர்களானால் உங்கள் எதிர்காலம் மாத்திரமல்ல எமது மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் உட்பட இன்னும் சில தமிழ்த் தேசியக் கட்சிகள் வடகிழக்கு சிவில் அமைப்புகள் என்பன இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்கி அதனூடாக ஜனாதிபதித் தேர்தலை சங்குச் சின்னத்திலே சந்தித்திருந்தோம். அந்த வகையிலே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்ற விடயமாக கடந்;த கிழமை தமிழ்ப் பொதுக்கட்டமைப்புடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த வகையிலே தமிழர்களின் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட சங்குச் சின்னத்திலே இந்தப் பொதுத் தேர்தலையும் சந்திப்பதென ஏகமனதாக கடந்த 26ம் திகதிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் சங்குச் சின்னத்தினை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்குச் சின்னத்திற்குப் பதிலாக மாற்றி எடுப்பதற்கான வேண்டுகோள் தேர்தல்கள் ஆணையகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் அதற்கான பதில் கிடைக்க இருக்கின்றது.

ஆனால் தற்போது வடக்கு கிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை என்னவென்றால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெற்கிலே ஒரு ஊழலற்ற அரசாங்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற ரீதியில் பெருவாரியான தெற்கு மக்கள் வாக்களித்து ஒரு ஜனாதிபதியைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் இருந்து அவருக்கான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதனை வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கிலும் அதே வழியிலே இளைஞர்களை பாராளுமன்றத் தேர்தலுக்குக் கொண்டு வரவேண்டும், புதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோசம், வேண்டுகோள் வலுப்பெற்றிருக்கின்றது.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தியை நோக்கி எமது மக்களும் நகர்வதையும் நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதில் தமிழ் மக்கள் ஒன்றை விளங்கிக கொள்ள வேண்டும். தெற்கில் இருக்கும் பிரச்சனை வேறு எமது வடகிழக்கில் உள்ள பிரச்சனை வேறு. தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கான தேவை வேறு, எமது மக்களின் தேவை வேறு. எமது மக்கள் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் ஆயுத ரீதியாக உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பொராட்டத்திற்கான நியாயமான தீர்வு இன்னும் வரவில்லை. தேசிய மக்கள் சக்தியால் கூட அந்தத் தீர்வு கிடைக்குமா என்பதும் ஒரு சந்தேகமாகவே இருக்கின்றது.

ஏனெனில் புதிய ஜனாதிபதி கூட இந்த நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலே இனப்பிரச்சனை சம்மந்தமாகவோ, வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனை சம்மந்தமாகவோ, தமிழ் மக்கள் சம்மந்தமாகவோ எதுவித காத்திரமான கருத்துகளையும் அவர் கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ஆட்சி ஏறும் போது அநுராதபுரத்திலே தான் ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற இனவாதக் கருத்தை வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனால் தற்போதையை அவ்வாறு கூறவில்லை என்பதால் அவர் ஒரு இனவாதி அல்ல என்று கூறுகின்றார்கள். அவ்வாறு கூறிவிட முடியாது.

அவரின் சுயரூபத்தை இன்னும் மக்கள் புரியவில்லை. ஒரு இனவாதி இனவாதக் கருத்துக்களை வெளிப்படையாகக் கூற வேண்டிய தேவை இல்லை. இவர் முற்றுமுழுதாக இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழர்களுக்கு குறைந்த பட்ச அதிகாரம் கூட கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகப் போராட்டம் நடத்திய ஒரு போராளி. இதிலிருந்தே அவரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் இளைஞர்களை வரவற்கின்றோம். புதியவர்களையும் அழைக்கின்றோம். நாங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காக ஆயுதமேந்தி விடுதலைக்காகப் போராடியவர்கள் அல்ல. எங்கள் உயிரையும் துச்சமென மதித்தே நாங்கள் ஆயுதமேந்திய பேராட்டத்திற்கு வந்தோம். துரதிஸ்டவசமானதும், தற்செயலனதுமான விடயமே இந்தப் பாராளுமன்றப் பிரதிநித்துவம் எல்லாம் எமது மக்களுக்காக இந்த அரசியலிலே இருக்க வேண்டிய நிலை. இளைஞர்கள் வரவேண்டுமா, புதியவர்கள் வரவேண்டுமா, எமது மக்களின் உரிமைகளை அரசியல் ரீதியில் பெறுவதற்குப் போராடுவதற்கு நீங்கள் தயாரா, படித்த பண்பான தமிழ்த் தேசியப் பற்றுள்ள இளைஞர்கள் இருக்கின்றீhர்களா, பொதுமக்களுக்கு சேவை நலப்பான்மையுடன் சேவையாற்றக் கூடிய இளைஞர் யுவதிகள் இருக்கின்றீர்களா, இந்தத் தேர்தலிலே போட்டியிட்டு வெல்லக் கூடிய இளைஞர்கள் இருக்கின்றீர்களா, நீங்களாகவே முன்வாருங்கள்.

வெறுமனே சமூக வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இளைஞர்களுக்கு இடங்கொடுங்கள் பழையவர்கள் ஒதுங்கிக கொள்ளுங்கள் என்று எழுதுவதில் மாத்திம் எந்தப் பயனும் இல்லை. முன்வாருங்கள், எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் பின்நின்று ஆலோசகர்களாக உங்களை வழிநடத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். நாங்கள் தொடர்ந்து இந்தப் பாரளுமன்றக் கதிரைகளில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர்களும் அல்ல அதற்காகப் போராடியவர்களும் அல்ல. இணைந்த வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சுயநிர்ணய உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்தவர்கள். நாங்கள் விட்டுக் கொடுப்புக்குத் தாயாராக இருக்கின்றோம். இளைஞர் யுவதிகளே திறiமானவர்கள் பற்றுள்ளவர்கள் இருந்தால் முன்வாருங்கள் உங்களுக்கு இடம்தருவதற்கு நாங்கள் காத்திருக்கின்றோம். அதைவிடுத்து தேசியக் கட்சிகளின் பின்னால் அந்த மாய அலைக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வீர்களானால் உங்கள் எதிர்காலம் மாத்திரமல்ல எமது மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி சூனியமாகும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இலட்சக்கணக்கான உயிர்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும், பில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம். எமது கல்வி கலை, கலாச்சாரம் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் திக்குத் தெரியாமல் நிற்கின்றார்கள். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கடமை எங்களுக்கு இருக்கின்றது. எங்களைப் போன்வர்கள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

உங்களின் தீர்மானம் எமது மக்களைப் படுகுழிக்குள் தள்ளிவிடக் கூடாது. தேசியக் கட்சிகளுடன் இணைந்து எமது மக்களின் இருப்புக்காகப் போராடியவர்களை போராடுபவர்களை அவமரியாதை செய்துவிடக் கூடாது. அந்த மாயையை விடுத்து எங்களுடன் கைகோருங்கள். நாங்கள் உங்களுக்காக விட்டுக்கொடுப்பதற்கும், உங்களை வழிநடத்துவதற்கும் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.