காரைதீவைச் சேர்ந்த பிரபல தமிழ்ப் பற்றாளர் தமிழாசான் ஓய்வு நிலை அதிபர் கலாபூஷணம் பொன். தவநாயகம் தனது 89 வது வயதில் மட்டக்களப்பில் நேற்று (29) காலமானார்.
அவரது இறுதி யாத்திரை நாளை (1) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கல்வியங்காடு இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெறுமென அவரது புதல்வர் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் த.மதிவேந்தன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். சிறந்த கலை இலக்கிய வாதி. மேடைப் பேச்சாளர். இவரது நகைச்சுவைப் பேச்சு அவையை அதிரவைக்கும்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக பன்னெடுங்காலமாக சேவையாற்றிவர். இன்றும் பாடப்படும் அப் பாடசாலையின் பாடசாலை கீதத்தை இயற்றிய பெருங் கவிஞராவார்.
சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்டு காரைதீவில் வாழ்ந்த திரு பொன்.தவநாயகம் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய ஆசிரியராக விடுதி மேலாளராக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் பகுதிநேர தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.
கிழக்கில் ஆளுமைகள் பலரையும் உருவாக்கிய பெயர்பெற்ற ஆசிரியர்களுள் ஒருவர்.
மிதவாதத் தமிழ்த் தேசியக் கருத்தியலில் ஆழமான பற்றுக் கொண்டு தனது மேடைப் பேச்சினூடாகத் தமிழ்த் தேசியச் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்திய ஆளுமைகளுள் ஒருவர்.
கலைஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்களுடன் செயலாற்றியவர்.
அவருக்கு மனைவி மங்கையர்க்கரசியுடன், டாக்டர். கௌரிகாந்தன்( அவுஸ்திரேலியா ), பொறியியலாளர் ஞானவிந்தன்( நியூசிலாந்து) ,பேராசிரியர் மதிவேந்தன்( கிழக்கு பல்கலைக்கழகம்),தமிழினி (அவுஸ்திரேலியா ) ஈழசுகந்தன்( நியூசிலாந்து ) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
பொன் தவநாயகம் எனும் ஆளுமையின் உடல் மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்று அவரது மாணவர்கள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
( வி.ரி. சகாதேவராஜா)