ஈழவர் ஜனநாயக முன்னணியின் உபதவிசாளர் பதவி விலகல்

ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியின் உபதவிசாளர் உள்ளிட்ட சிலர் கட்சியை விட்டு விலகி செல்லவுள்ளதாக உபதவிசாளர் ந. திலிப்குமார் நேற்று மாலை மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் சில நிருவாக உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டதன் விளைவாக கட்சியின் உப தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான ந. திலிப்குமார் மற்றும் கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் வேலுப்பிள்ளை நவரெட்ணம் உள்ளிட்ட சில உறுப்பினர்களும் குறித்த ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியை விட்டு விலகி தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் கட்சி தொடர்பாக தன்னிச்சையாக செயற்படுவதாகவும் இவர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் உப தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான ந. திலிப்குமார் மேலும் தெரிவித்தார்.